லேபிள்கள்

21.12.16

தமிழகத்தில் 770 அரசுப் பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் திட்டம் விரைவில் துவக்கம் அமைச்சர் பாண்டிராஜன் தகவல்.

சென்னை, டிச. 19& தமிழகத்தில் உள்ள 770 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் விரைவில் துவங்க திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.  
   தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி விதி எண் 110 ன் கீழ் பள்ளிக்கல்வித்துறையில் 770 பள்ளிகளில் மெய்நிகர் வகுப்பறைகள் அமைக்கப்படும் என அறிவித்தார். அப்போது,  தமிழக மாணவர்களுக்கு ஒரே வகையான தரமான கற்றல் கற்பித்தலைக் கொண்டு சேர்க்கும் வகையில் இன்றையத் தகவல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு மெய்நிகர் வகுப்பறைகள் (விர்சுவல் கிளாஸ் ரூம்) ஏற்படுத்தப்படும்.


முதற்கட்டமாக 770 அரசுப் பள்ளிகளிலும், 11 மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களில் மெய்நிகர் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும். மேலும், 11 மைய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களிலிருந்து நடத்தப்படும் வகுப்பறை செயல்பாடுகளை, இணையத் தொடர்பின் வாயிலாக கிராமப்புறப் பகுதியிலுள்ள அனைத்துப் பள்ளிகளும் பெற்று மாணவர்கள் பயன்பெறுவர். இத்திட்டத்தினை செம்மையாக செயல்படுத்த கோயம்புத்தூர், பெரம்பலூர் மற்றும் தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு கட்டடங்கள் மற்றும் தளவாடங்கள், நூலகம் மற்றும் ஆய்வகம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் . இதற்கென 33 கோடியே 22 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என கூறினார்.

அதனைத் தொடர்ந்து மாநில ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் சார்பில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 770 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் துவக்கப்பட உள்ளது. தமிழகத்தில் 11 மண்டலமாக பிரித்து இதற்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த  மையத்திலோ அல்லது பள்ளிகளிலோ நடைபெறும் பாடத்தினைவகுப்பறையில் விடியோ கான்பரன்சிங் முறையில் பாடம் மாணவர்கள் கற்கலாம். இந்த முறையில் பெரும்பாலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் வகுப்புகள் ஆடியோ, வீடியோ, விசுவல் முறையில் நடத்தப்படும்.

இந்த வகுப்பறை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் இணையத்தில் இணைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் பாடம் நடைபெறும்போது மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.    இந்த வகுப்பறை அமைக்க பள்ளியில் கணிப்பொறி, இணையம், யூபிஎஸ், பிராட்பேண்ட் வசதி கட்டாயம் இருக்க வேண்டும். இந்த வகுப்பு நடத்தப்படுவதன் மூலம் இதுவரை பாடங்களை மனப்பாடம் செய்த மாணவர்கள் இனிமேல் நேரடியாகவும்,செயல்முறையுடன் கூடிய பாடங்களை வீடியோ மூலம் பார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் கற்றல் அறிவை மாணவர்களிடையே 100 சதவீதம் வளர்க்க முடியும். ஆங்கில அறிவும் எளிதில் கிடைக்கும் என்பதால் இந்த புதிய வகுப்பு முறை தமிழக பள்ளி கல்வித்துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இதற்கான உபகரணங்கள் தற்பொழுது பள்ளிகளுக்கு அனுப்பபட்டு பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டிராஜன் கூறும்போது, தமிழகக்தில் 10,12 ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், அவர்கள் தேர்வினை எளிதாக எதிர்கொள்ளும் வகையில், விர்சுவல் கிளாஸ் ரூம் விரைவில் துவக்கப்பட உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் வகையிலும், மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு துவக்கப்படும் என தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக