லேபிள்கள்

22.12.16

TNPSC உறுப்பினர்களாக 11 பேர் நியமிக்கப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு கடந்த ஜனவரி 31ம் தேதி 11 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக அதிமுக அனுதாபிகள் நியமிக்கப்பட்டதை எதிர்த்து
பாமக, திமுக,புதிய தமிழகம் கட்சிகள் தொடர்ந்த வழக்கில் 11 பேர் நியமனம் ரத்து என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவையின் தலைவர் வழக்கறிஞர் கே.பாலு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ''அரசியல் சாசன சட்டத்தின்படி டிஎன்பிஎஸ்சி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்பு. ஆனால், தமிழக அரசு பரிந்துரையின் பேரில் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக ஆர்.பிரதாப்குமார், வி.சுப்பையா, எஸ்.முத்துராஜ், எம்.சேதுராமன், ஏ.வி.பாலுச்சாமி, எம்.மாடசாமி, வி.ராமமூர்த்தி, பி.கிருஷ்ணகுமார், ஏ.சுப்பிரமணியன், என்.பி.புண்ணிய மூர்த்தி, எம்.ராஜாராம் ஆகிய 11 பேர் நியமிக்கப்பட்டனர்.

இப்பதவியில் நியமிக்கப்படுபவர்கள் 6 ஆண்டுகளுக்கு எந்த குறுக்கீடும் இல்லாமல் பதவி வகிக்கலாம். இப்பதவியில் நியமிப்பதற்கு அரசியலமைப்பு சட்டத்தின் படி அரசியல் சார்பின்றி வெளிப்படையான பல்வேறு சிறப்பு தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி மற்றும் அதன் செயல்பாடுகள் என்ன என்பதை அறியாதவர்களை, கொஞ்சம் கூட அனுபவம் இல்லாத இளம் வயதினரை இதன் உறுப்பினர்களாக தற்போது நியமித்துள்ளனர். இதில் பெரும்பான்மையானவர்கள் அதிமுக அனுதாபிகளாகவும், அரசு வழக்கறிஞர்களாகவும், அதிமுக வழக்கறிஞர் அணியில் உள்ளவர்களாகவும் இருக்கின்றனர். மேலும், இவர்கள் அனைவரும் ஒரே குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
பெண்கள் ஒருவர் கூட இப்பதவியில் அமர்த்தப்படவில்லை. டிஎன்பிஎஸ்சி வரலாற்றிலேயே இப்போதுதான் இத்துறைக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் அதிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வின் மூலம் அதிமுக அரசு தனது பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளது.
அதிமுகவினரான நவநீத கிருஷ்ணன், நட்ராஜ் போன்றவர்கள் டிஎன்பிஎஸ்சி தலைவர்களாக நியமிக்கப்பட்டு, அதன் பிறகு இப்போது அதிமுகவில் அங்கம் வகிக்கின்றனர். எனவே இந்த 11 பேரின் நியமனத்தையும் ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று அதில் கோரியிருந்தார்.

திமுக மனு விபரம்

இதனிடையே, இதே கோரிக்கையை வலியுறுத்தி திமுக சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் மனு தாக்கல் செய்தார்.
அதில், உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறி தற்போது அதிமுக அனுதாபிகள் 11 பேரை டிஎன்பிஎஸ்சிக்கு உறுப்பினர்களாக முதன்மை செயலாளரின் பரிந்துரையின்பேரில், கவர்னர் நியமித்துள்ளார். இப்பதவிக்கு நிர்வாகத்திறன் இல்லாத வழக்கறிஞர்களை நியமிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை மீறி நியமிக்கப்பட்டுள்ள இந்த 11 பேரின் நியமனத்தை செல்லாது என அறிவித்து, அந்த நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று டி.கே.எஸ். இளங்கோவன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு 11 புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக