லேபிள்கள்

6.2.17

முறைப்படுத்தப்படாத 10,000 அரசு பணியிடங்கள்:சம்பள பிரச்னையால் நிதித்துறை அதிருப்தி

தமிழகத்தில், பல்வேறு அரசு துறைகளில், புதிதாக உருவாக்கப்பட்ட, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, தற்காலிக பணியிடங்களில், நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு, சம்பளம் வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மாநிலத்தில், வருவாய், கல்வி, பொதுப்பணி, மருத்துவம், கூட்டுறவு உட்பட, பல்வேறு அரசு துறைகளில் தேவைக்கு ஏற்ப, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டபணியிடங்கள், புதிதாக உருவாக்கப்பட்டன.இவற்றுக்கு, மாற்றுப்பணி அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு, நிதித்துறை சார்பில், தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகின்றன.

 ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒருமுறை, ஒப்புதல் வழங்கிய நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, ஒப்புதல் வழங்க, நிதித்துறை உத்தரவிட்டது.இதனால், 'பே ஆர்டர்' பெற்று உரிய மாதத்தில், சம்பளம் பெற முடியாமல், 10 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர்.

 இது குறித்து, நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடங்களில், பல்வேறு குளறுபடிகள் நீடிக்கின்றன. குறிப்பாக திட்டப் பணிகளுக்கு, தற்காலிக அடிப்படையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாற்றுப்பணியாக நியமிக்கப்படும் போது, அவர்களுக்கு சம்பந்தப்பட்ட திட்ட நிதி மூலம், சம்பளம் வழங்க வேண்டும். குறிப்பாக, கல்வித் துறையில், 875 உருவாக்கப்பட்ட பணியிடங்கள் உள்ளன. எஸ்.எஸ்.ஏ., - ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் பள்ளி கல்வித் துறையில் உள்ளவர்களுக்கு, எந்த திட்டங்கள் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது என்பதில்,பல்வேறு நடைமுறை குளறுபடிகள் உள்ளன.
இது தொடர்பாக, நிதித்துறை சார்பில், தொடர்ந்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டு வருகிறது. திட்ட நிதியை, மாநில அரசுக்கு ஒப்படைப்பு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. நிதித்துறை ஒப்புதலும், விரைவில் கிடைப்பதில்லை.அதேபோல், மாற்றுப் பணி நியமிக்கப்பட்டவர்களின் பழைய பணியிடங்கள், 'சரண்டர்' செய்யப்படாமலும் இழுத்தடிக்கப்படுகின்றன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


 இதனால் பாதிக்கப்பட்டோர், 'புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடங்களை முறைப்படுத்தவும், அரசு துறைகளில் தேவை அடிப்படையிலான தற்காலிக பணியிடங்களை நிரந்தரப்படுத்தவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்து உள்ளனர். - நமது நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக