லேபிள்கள்

7.2.17

கோப்புகளில் தூசி படிய விட்டால் 'சஸ்பெண்ட்' : கல்வி துறையினருக்கு இயக்குனர் எச்சரிக்கை

'பள்ளிகளின் அங்கீகாரம், ஆசிரியர்களின் கோரிக்கை, ஓய்வூதியம் தொடர்பான கோப்புகளை, தேவையின்றி கிடப்பில் போட்டால், ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் எச்சரித்துள்ளார்.
தமிழக பட்ஜெட், அடுத்த மாதம் தாக்கலாக உள்ளது. அதனால், கல்வித் துறை உட்பட அனைத்து துறைகளிலும், முன்னேற்பாடுகள் துவங்கி உள்ளன. இந்நிலையில், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் ஓய்வூதியம், பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பித்தல், அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியிடங்களை நிரப்புதல், தேர்வு பணிகள் உள்ளிட்டவற்றில், தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. 

இது தொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்களுக்கு, புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மாவட்ட கல்வி அதிகாரிகளான, டி.இ.ஓ.,க்களும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களும், பல கோப்புகளை, மாதக் கணக்கில் கிடப்பில் போட்டுள்ளது தெரிய வந்தது. அதுபற்றி, சி.இ.ஓ.,க்களிடம், பள்ளிக்கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். 

இதையடுத்து, ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள் தொடர்பான கோப்புகளை, தேவையின்றி கிடப்பில் போட்டு, நிர்வாகத்தில் சிக்கலை ஏற்படுத்தினால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர் என, எச்சரிக்கப்பட்டு உள்ளது. அதே போல, டி.இ.ஓ., மற்றும் சி.இ.ஓ.,க்கள் புகார்களுக்கு இடமின்றி செயல்படவும், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தி உள்ளார். 
- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக