தமிழகத்தில், 4,000த்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், அங்கீகாரமின்றி செயல்படுவதால், அவற்றில் படிக்கும் பல ஆயிரம் மாணவர்கள், அரசு பொதுத்தேர்வு எழுத முடியுமா
என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையறிந்த, தணிக்கை துறை, கல்வி அதிகாரிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில், 5,600 உயர்நிலை மற்றும் 6,300 மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன; இவற்றில், 1,800 பள்ளிகள் அரசு உதவி பெறுபவை.
இதுதவிர, 4,600 தனியார் பள்ளிகள், மெட்ரிக் இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றுக்கு, ஆண்டுதோறும் அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும். ஆனால், இரு ஆண்டுகளாக, அங்கீகாரம் வழங்கும் பணி முடங்கியுள்ளது.
இதனால், 4,000த்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், அங்கீகாரமின்றி இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத முடியுமா என்ற
அச்சத்தில் உள்ளனர்.
காரணம் என்ன?
பள்ளிகளுக்கு இதுவரை விதிகளை மீறி, அங்கீகாரம் வழங்கிய கல்வி அதிகாரிகள், கோர்ட்டில் பல வழக்குகளை சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே, 'அங்கீகாரம் கொடுத்தால் தானே பிரச்னை' என, அங்கீகாரமின்றி பள்ளிகளை இயங்க விட்டுள்ளனர்.
அங்கீகாரம் கோரிய விண்ணப்பங்கள், கல்வித் துறையின் பல அலுவலகங்களிலும் முடக்கப்பட்டு உள்ளன. அரசு உதவிபெறும், 500 தனியார் பள்ளிகளுக்கும், அங்கீகாரம் இல்லாததால், ஆசிரியர்களுக்கு, அரசு மானியத்தில் இருந்து, சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நடவடிக்கை
ஜன., 10ல், பள்ளிக்கல்வி செயலர் சபிதா தலைமையில் நடந்த, பள்ளிக்கல்வி தணிக்கை அதிகாரிகள் கூட்டத்தில், அங்கீகாரமின்றி பள்ளிகள் இயங்குவது குறித்து, தணிக்கை துறையினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். நிலைமையை சமாளிக்க, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு மட்டும், உடனே அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.
'கல்வி ஆண்டு முடியும் நிலையில், இன்னும் பள்ளிகளுக்கு அங்கீகாரமே வழங்காதது, தமிழக அரசின் மெத்தனத்தையே காட்டுகிறது' என, கல்வியாளர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
'போராட்டத்தில் குதிப்போம்'
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலர் நந்தகுமார் கூறியதாவது:தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தராமல், விண்ணப்பங்களை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். இருப்பினும், மாணவர்கள் நலன் கருதி, பள்ளிகள் இயங்குகின்றன. இந்த பள்ளி மாணவர்களுக்கு, சலுகை அளித்து, பொதுத்தேர்வில் அனுமதிக்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அங்கீகாரம் கிடைக்காமல், பள்ளி வாகனங்களுக்கு, எப்.சி., உரிமத்தை புதுப்பிக்க முடியவில்லை. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, கல்வி கட்டணமின்றி மாணவர்களை சேர்த்தாலும், அதற்கு, மானியம் கிடைப்பதில்லை. இதற்கு எல்லாம் தீர்வு வராவிட்டால், பள்ளி தாளாளர்களுடன் ஆலோசித்து, போராட்டத்தில் குதிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக