லேபிள்கள்

7.12.17

அனைத்து பள்ளிக்கூடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தக்கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை ஐகோர்ட்டில், எம்.கலைச்செல்வி என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு,
தனியார் பள்ளிகள் கண்காணிப்பு கேமராக்கள் கண்டிப்பாக பொருத்த உத்தரவிட வேண்டும். இதன்மூலம் பள்ளிகளில் நடைபெறும் துன்புறுத்தல், வேண்டத்தகாத செயல்பாடுகள் தடுக்க முடியும். எனவே அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அரசு, தனியார் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஏற்கனவே ஒரு வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஏனெனில் ஒவ்வொரு பள்ளியிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உத்தரவிட்டால், கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். இந்த நிதிச்சுமையை மாணவர்களின் கல்வி கட்டணத்தில் தான் மறைமுகமாக பள்ளி நிர்வாகங்கள் திணிக்கும். இதனால் மாணவர்களின் கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுவிடும் என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளரின் கருத்தாக உள்ளது.

எனவே, அனைத்து பள்ளிக்கூடங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று கூறும் இந்த மனுவை ஏற்க முடியாது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம். அதேநேரம், பள்ளி வளாகத்தை முழுமையாக கண்காணிக்க நினைக்கும் பள்ளி நிர்வாகங்கள், கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக முடிவு எடுத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக