துவக்கப்படாத, ஜியோ இன்ஸ்டிடியூட்டிற்கு, 'மேன்மை பொருந்திய கல்வி மையம்' என்ற அந்தஸ்து வழங்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நிபந்தனை அடிப்படையில்
அந்த அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில், அரசு துறையைச் சேர்ந்த மூன்று கல்வி மையங்கள் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த மூன்று கல்வி மையங்களுக்கு, மேன்மை பொருந்திய கல்வி மையம் என்ற அந்தஸ்து வழங்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது. சிறப்பு அந்தஸ்து பெற்ற இந்த கல்வி மையங்களுக்கு, பிற கல்வி மையங்களை போல் அல்லாமல், அதிகளவு தன்னாட்சி அதிகாரங்கள் வழங்கப்படும். அவை, புதிய பிரிவு பாடங்களை துவக்கவும், வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை சேர்க்கவும், வெளிநாடுகளை சேர்ந்த கல்வி மையங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படவும் அதிகாரம் தரப்படும்; இதற்கு, மத்திய அரசின் ஒப்புதலை பெறத் தேவையில்லை.
மேன்மை பொருந்திய கல்வி மைய அந்தஸ்து பெற்ற தனியார் கல்வி மையங்களில் ஒன்று, ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த, ஜியோ இன்ஸ்டிடியூட். இந்த மையம், இன்னும் துவக்கப்படாத நிலையில், அதற்கு, மேன்மை பொருந்திய கல்வி மைய அந்தஸ்து வழங்கப்பட்டதற்கு, பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை செயலர், சுப்ரமணியம், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: மேன்மை பொருந்திய கல்வி மையமாக தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில், 11 தனியார் கல்வி மையங்கள் இடம் பெற்றன. அவற்றில், ஒன்றான, ஜியோ இன்ஸ்டிடியூட், நிலம் கையிருப்பு, உயர் திறன் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், போதிய நிதி, எதிர்காலம் குறித்த சிறப்பான தொலைநோக்கு பார்வை, செயல் திட்டங்கள் ஆகியவற்றை பெற்றுள்ளது.
ஜியோ இன்ஸ்டிடியூட், பசுமைக்கள கல்வி மையம் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதற்கு, நிபந்தனைகளுடன், 'மேன்மை பொருந்திய கல்வி மையம்' அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக