லேபிள்கள்

8.7.18

ஆறு ஆண்டுகளாக முடங்கிய கணினி வழி தேர்வை, மீண்டும் நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முயற்சி

ஆறு ஆண்டுகளாக முடங்கிய கணினி வழி தேர்வை, மீண்டும் நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முயற்சி எடுத்துள்ளது.முதற்கட்டமாக, குறைவான நபர்கள் எழுதும் தேர்வை மட்டும், சோதனை ரீதியாக, கணினி வழியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை; விடை திருத்தத்திலும் முறைகேடு நடக்கிறது என்ற, குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கடந்த, 2012ல், டி.என்.பி.எஸ்.சி., தலைவராக, முன்னாள் டி.ஜி.பி., நட்ராஜ் மற்றும் செயலராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதயசந்திரன் ஆகியோர் பதவி வகித்த போது, தேர்வுகளில் மாற்றங்களை ஏற்படுத்தினர்.ஆன்லைன் விண்ணப்ப முறை அறிமுகமானது. மாவட்ட அளவில், தேர்வுக்கான ஒருங்கிணைப்பாளர்களாக, மாவட்ட கலெக்டர்கள் நியமிக்கப் பட்டனர்.

கணினி வழியில் திருத்தப்படும், ஓ.எம்.ஆர்., வகை விடைத்தாள்களை பயன்படுத்தி தேர்வு நடத்தப்பட்டது. அதேபோல், 'ஆன்லைன்' மற்றும் கணினி வழி தேர்வும் அறிமுகமானது.சென்னை டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், 150 கணினிகள் அடங்கிய, ஆன்லைன் தேர்வு மையம் அமைக்கப்பட்டது.

ஆனால், மின் வெட்டு, ஆன்லைன் இணைப்பில் ஏற்படும் கோளாறுகள், மாவட்ட வாரியாக, ஆன்லைன் தேர்வு மையம் அமைக்க முடியாதது போன்ற பிரச்னைகளால், ஆன்லைன் தேர்வை தொடர முடியவில்லை.தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, மீண்டும், ஆன்லைன் தேர்வு அல்லது, கணினி வழியாக, 'ஆப் லைன்' தேர்வை நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முயற்சி மேற்கொண்டுள்ளது.

முதற்கட்டமாக, தற்போதுள்ள கணினிகளை மாற்றி, புதிய தொழில்நுட்ப வசதியுள்ள கணினிகள், விடை திருத்த சாப்ட்வேர் போன்றவற்றை வாங்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.மாவட்ட வாரியாக, கணினி வழி தேர்வுக்கு, கணினிகள் வினியோகம் செய்யும், தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய, டெண்டர் கோரப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி.,யின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்பட, தனியார் நிறுவனம் முன்வந்தால், முதற்கட்டமாக குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் பங்கேற்கும் தேர்வுகளை, சோதனை ரீதியாக, கணினி வழியில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

எந்தெந்த பதவிகளுக்கு கணினி வழியாக தேர்வு

குரூப் - 1, குரூப் - 2, குரூப் - 3 ஏ, குரூப் - 4, வி.ஏ.ஓ., தேர்வு போன்ற தேர்வுகளில், பல லட்சம் பேர் பங்கேற்பர். அவற்றுக்கு, ஆன்லைன் அல்லது கணினி வழி தேர்வு நடத்த போதிய வசதிகள் இல்லை.எனவே, தடய அறிவியல், புவியியல், புள்ளியியல், சட்டக்கல்வி, நகர்ப்புற வளர்ச்சி துறை, போக்குவரத்துத்துறை ஆய்வாளர் போன்ற, 50 ஆயிரத்துக்கும் குறைவானோர் பங்கேற்கும் தேர்வுகளை, கணினி வாயிலாக நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு முதல், இந்த திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என, தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக