உலக அளவில் டீன் ஏஜ் பருவத்தினர் நான்கு சதவிகிதம் பேருக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளது. 1994-ம் ஆண்டில் இந்தியாவில் 4 சதவிகிதம் குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை இருந்தது. ஆனால் அது தற்போது 8.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் நாங்கள் நடத்திய ஆய்வில் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்கள் 9.6 சதவிகிதம் பேருக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பதைக் கண்டறிந்தோம். மேலும், 10.7 சதவிகிதம் மாணவ, மாணவிகள் உயர் ரத்த அழுத்தத்துக்கு முந்தைய நிலையில் உள்ளனர். இவர்கள் முறையான மருத்துவ சிகிச்சை, வாழ்க்கை முறை மாற்றம் மேற்கொள்வதன்மூலம் உயர் ரத்த அழுத்தப் பிரச்னை வராமல் தவிர்க்க முடியும்.
உயர் ரத்த அழுத்தப் பிரச்னை ஆரம்பநிலையில் வெளியே தெரியாது. குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது தளர்ச்சி, படபடப்பு, மயக்கம், தலைவலி போன்ற அறிகுறிகள் தெரியலாம். ஆரம்பத்திலேயே இதைக் கண்டறிந்து சிகிச்சை எடுக்காவிடில், மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு, சிறுநீரகப் பாதிப்பு, கண் தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம்.
புதுச்சேரியில் நாங்கள் ஆய்வு மேற்கொண்ட குழந்தைகள் மத்தியில் உடல் பருமன், மன அழுத்தம் மற்றும் துடிப்பற்ற வாழ்க்கை முறை காரணமாக உயர் ரத்த அழுத்தம் பிரச்னை அதிகரித்து வருவதையும் எங்கள் ஆய்வில் கண்டறிந்தோம்.
உடல் பருமன்
உடல்பருமனே உயர் ரத்த அழுத்தத்துக்கு ஆணிவேர். அரசு பள்ளி மாணவர்களில் ஐந்து சதவிகித மாணவர்கள் உடல்பருமனுடன் இருந்தனர். ஆனால் தனியார் பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகளில் 20 சதவிகிதம் பேர் உடல் பருமனுடன் இருந்தனர். உடல்பருமனுள்ள ஆண் மாணவர்களில் இருவரில் ஒருவருக்கும், ஒட்டுமொத்தமாக உடல்பருமனுள்ள மாணவர்களில் 35 சதவிகிதம் பேருக்கும் உயர் ரத்த அழுத்தம் இருப்பதைக் கண்டறிந்தோம். உடல்பருமனுள்ள மாணவர்களுக்கு, உயர் ரத்த அழுத்தத்துடன் மாரடைப்பு, சர்க்கரை நோய், மூட்டு தொடர்பான பிரச்னைகள், மூச்சுத் திணறல், தூக்கம் தொடர்பான பிரச்னைகள் வரலாம்.
மன அழுத்தம்
இந்த மாணவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் பிரச்னை ஏற்பட மன அழுத்தமும் மற்றொரு முக்கிய காரணம் என்று கண்டறிந்தோம். அதிலும் அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் உள்ள மாணவ- மாணவிகளுக்கு அதிக அளவில் மன அழுத்தப் பிரச்னை இருந்தது. காலையில் எழுந்தது முதல், இரவு படுக்கச் செல்லும்வரை தொடர்ந்து படிப்பு, வெளியில் சென்று விளையாடாதது, துடிப்பான வாழ்க்கை முறையின்மை, ஆசிரியர்கள், பெற்றோர்களின் நெருக்கடி காரணமாக இவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது. மன அழுத்தம் அதிகரிக்கும்போது உடலில் ரசாயன மாற்றம் ஏற்படுகிறது. இது ரத்தக் குழாய்களைத் தாக்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது.
படிப்பு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும் பெற்றோர், ஆசிரியர்கள் குழந்தையின் உடல் நலம் பற்றி கவனிக்க மறந்துவிடுகின்றனர். இதுவே இந்த இளம்வயதில் உயர் ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்படுவதற்குக் காரணமாகிவிட்டது. உயர் ரத்த அழுத்தம் வந்துவிட்டால் அதைக் குணப்படுத்த முடியாது. தொடர்ந்து மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வதன்மூலம் கட்டுக்குள் மட்டுமே வைத்திருக்க முடியும். 10 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயர் ரத்த அழுத்தத்துக்கு முந்தைய நிலையில் உள்ளனர். இவர்கள் இனியாவது விழித்துக்கொண்டால் உயர் ரத்த அழுத்தப் பிரச்னையைத் தவிர்க்கலாம்.
சிகிச்சை முறைகள்:
டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு வரும் உயர் ரத்த அழுத்தம் 50 சதவிகிதம் வேறு ஒரு நோயின் தாக்கமாக இருக்கலாம். இதை செகண்டரி ஹைபர்டென்ஷன் என்று குறிப்பிடுவர்.
ரத்தக்கொதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், ரீனல் ஃபங்ஷன் டெஸ்ட் மற்றும் அப்டாமினல் ஸ்கேன் செய்யவேண்டும். அது ப்ரைமரியா இல்லை செகண்டரியா என்பதைக் கண்டறிய வேண்டும். செகண்டரியாக இருந்தால், ரத்தக்கொதிப்புடன் அது தொடர்பான நோய்க்கும் சிகிச்சை அளிப்பது முக்கியமாகும்.
பி.எம்.ஐ. பரிசோதித்து, உடல்பருமன் இருந்தால், உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டு வந்து, ரத்த அழுத்தத்தை வெகுவாகக் குறைக்க வழிசெய்யலாம்.
மாணவர்களிடமும் ரத்தக்கொதிப்பின் அளவு வேகமாக உயர்வதை அரசு உணர வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறையேனும் அனைத்து பள்ளி மாணவர்களின் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதிப்பெண் முறை மாணவர்களிடம் அதிகளவு மன அழுத்ததை ஏற்படுத்துகிறது. இதை விடுத்து,percentile மற்றும் grade pointsபோன்ற முறைகளை நடைமுறைப்படுத்தினால், மன அழுத்தமும், ரத்தக் கொதிப்பும் வெகுவாகக் குறையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக