லேபிள்கள்

28.10.13

குடிபோதையில் பள்ளிக்கு வந்து ஆசிரியை தாக்கிய மாணவர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் குடிபோதையில் பள்ளிக்கு வந்த 9-ம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியரை தாக்கியுள்ளார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், திருமுக்குளம் கரையில் சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 9-ம் வகுப்பில் சின்ன அத்திகுளத்தைச் சேர்ந்த முத்துக்குமாரும், 10-ம் வகுப்பில் சித்தாலம்புத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரும், கம்மாப்பட்டி-ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த சுந்தரராஜ் என்பவர் 9-ம் வகுப்பிலும் படித்து வருகிறார்கள்.
சனிக்கிழமை மூவரும் பஸ்நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு பள்ளிக்குச் சென்றுள்ளனர். 9-ம் வகுப்பு ஆசிரியை இவர்கள் மது அருந்திவிட்டு வகுப்பறையில் உட்கார்ந்து தகாதவிதமாக நடப்பது குறித்து உதவித் தலைமை ஆசிரியர் முத்துராஜூடம் கூறியுள்ளார். அவர் மாணவர்களிடம் விசாரித்துள்ளார். இதனையடுத்து அவரை மாணவர்கள் மிரட்டியுள்ளார்கள். இது குறித்து கேள்விப்பட்டு 10-ம் வகுப்பு மாணவர் மணிகண்டனும் வந்துள்ளார். பின்னர் பென்சமின் என்ற ஆசிரியர் மாணவர்களுக்கு புத்திமதி கூறியுள்ளார். அவரிடம் மூன்று மாணவர்களும் தகராறு செய்து அவரைத் தாக்கியுள்ளார்கள்.
இதனையடுத்து மூன்று மாணவர்களையும் ஆசிரியர்கள் பிடித்து அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தினர். இதில் மூவரும் மது குடித்திருந்தது உறுதியானது.ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் ஆசிரியர்களை மிரட்டி, தாக்கிய மூன்று மாணவர்கள் மீதும் புகார் செய்யப்பட்டது.
இது குறித்து போலீஸார் கூறுகையில் முத்துக்குமார் என்ற மாணவர் கடந்த சில நாட்களுக்கு் முன்னர் அவர்கள் கிராமத்தின் வழியே செல்லும் மினி பஸ்ஸில் தகராறு செய்து கல்லால் அடித்ததில் பஸ் கண்ணாடி உடைந்தது. மாணவரின் தந்தை தீப்பெட்டி தொழிற்சாலை வைத்துள்ளார். அவர் பின்னர் இதனை சமரசமாக பேசி முடித்துள்ளார். மாணவர்கள் மூவரும் சேர்ந்து ஆஃப் மது பாட்டில் வாங்கி பிரித்துக் குடித்துள்ளார்கள் என்றனர்.

ஆசிரியர்கள் இது குறித்து கூறுகையில் மாணவர்கள் மீது திருடினால் கூட எந்த நடவடிக்கையும் எடுக்க இயலவில்லை. உடனடியாக சம்பந்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வந்துவிடுகிறார்கள். ஆசிரியர்களை மாணவர்கள் பார்த்தால் பயம் கலந்த மரியாதை இருந்த காலம்மாறி, மாணவர்களைப் பார்த்து ஆசிரியர்கள் பயப்பட வேண்டியுள்ளது. எந்தக் குற்றச்சாட்டையும் கூசாமல் மாணவர்கள், மாணவிகள் ஆசிரியர்கள் மீது கூறுகிறார்கள். ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற பள்ளிக்குச் சென்றோம், வந்தோம் என்று மட்டும் இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக