லேபிள்கள்

28.10.13

அரசு பள்ளியில் மோதல் , விழுந்தது பளார் அறை ஆசிரியைகள் மீது போலீஸ் வழக்கு

நாமக்கல் அரசு நடுநிலைப்பள்ளியில் இரு ஆசிரியைகளுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதனால் அரசு பள்ளி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாருதி நகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.
இங்கு நாமக்கல் நடராஜபுரத்தை சேர்ந்த ஆசிரியைகள் ஜமுனாராணி (42), லதா(48) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இதில் லதா 8ம் வகுப்புக்கு ஆசிரியையாக உள்ளார்.

கடந்த 22ம் தேதி 8ம் வகுப்பு மாணவர் நவீனை நோட்டு வாங்கி வரும்படி கணக்கு ஆசிரியை ஜமுனாராணி அனுப்பியுள்ளார். மாணவரிடம் ஜமுனாராணியை, லதா திட்டியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு லதா, ஜமுனா ராணியை கன்னத்தில் அறைந்து விட்டார். சக ஆசிரியர்கள் சமாதானம் செய்து வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாபு, உதவி தொடக்க கல்வி அலுவலர் மாதவன் ஆகியோர் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தி இரு ஆசிரியைகளுக்கும் அறிவுரை வழங்கினார்கள். ஆனால் மறுநாளும் இவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது

இந்நிலையில் நேற்று, ஆசிரியை லதா, ஜமுனா ராணி தன்னை சாதி பெயரை சொல்லி திட்டியதாக நாமக்கல் போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் ஜமுனாராணி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதைதொடர்ந்து ஆசிரியை ஜமுனாராணி, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். தன்னை லதாவும், அவரது கணவர் ரவியும் பள்ளிக்கு வந்து தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் செய்துள்ளார்


இதன்பேரில் லதா, அவரது கணவர் ரவி ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாபு கூறுகையில், ‘‘அரசு பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் ஒரே குடும்பம் என்ற உணர்வுடன் பணியாற்றி ஏழை மாணவர்களின் முன்னேற்றத்துக்கு பாடுபட வேண்டும். ஆனால், இரு ஆசிரியைகளையும் அழைத்து சமாதானம் செய்து வைத்தபிறகும், அவர்கள் தங்களது பிரச்னையை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றிருப்பது வேதனை அளிக்கிறது. காவல்துறையின் நடவடிக்கையை பொறுத்து, இரு ஆசிரியைகள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு செய்யப் படும்’’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக