தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின் (என்.சி.டி.இ.) "வழிகாட்டுதல் 2014'-ஐ ஆசிரியர் கல்வியியல் கல்வி நிறுவனங்கள் உடனடியாகப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அதன் தலைவர் சந்தோஷ் பாண்டா கூறினார்.
உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பின்னரே இந்த புதிய "வழிகாட்டுதல்' வெளியிடப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்றத்துக்குச் சென்று நேரத்தையும், பணத்தையும் வீணடிப்பதைத் தவிர்த்து, கல்வியின் தரத்தை மேம்படுத்த கல்வி நிறுவனங்கள் முன்வர வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.
நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் கல்வியியல் கல்வி நிறுவனங்களுக்கான புதிய "வழிகாட்டுதலை' என்.சி.டி.இ. கடந்த டிசம்பரில் வெளியிட்டது. இந்தப் புதிய வழிகாட்டுதல்படி இதுவரை ஓராண்டாக இருக்கும் பி.எட்., எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், ஆண்டுக்கு 100 மாணவர்கள் சேர்க்கை என்பது, 50 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதிய வழிகாட்டி விதிமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் கல்லூரிகளின் மேலாண்மை சங்கம் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது.
அந்த மனுவில் கூறப்பட்டதாவது:
பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான புதிய விதிமுறைகளை நிறைவேற்றுவதாக 21 நாள்களுக்குள் அனைத்து கல்வி நிறுவனங்களும் உத்தரவாதம் அளிக்க வேண்டும். இல்லையெனில் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று வழிகாட்டி விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போது, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் சட்டத்தைப் பின்பற்றி வருகிறோம். புதிய விதிகளை நடைமுறைப்படுத்தினால், தனியார் கல்வி ஒழுங்குமுறைச் சட்டத்தையும் பின்பற்ற வேண்டியிருக்கும். இரண்டும் தனித் தனிச் சட்டங்கள்.
இந்தப் புதிய விதிமுறைகளை பின்பற்றினால் கல்வி நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும். இது எங்களை மிரட்டுவது போல் உள்ளது. எனவே, புதிய விதிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, என்.சி.டி.இ. தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், வழக்கு நிலுவையில் இருப்பதால் 21 நாள்களுக்குள் புதிய விதிமுறைகள் பின்பற்றப்படும் என்ற காலக்கெடுவை வலியுறுத்த மாட்டோம் என்று உறுதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து, மனுவுக்கு மார்ச் 16-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தேசிய கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், என்.சி.டி.இ.-யும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகமும் இணைந்து "என்.சி.டி.இ. வழிகாட்டுதல் 2014', புதிய கல்வித்திட்டம் குறித்த பயிற்சிப் பட்டறையை ஞாயிற்றுக்கிழமை நடத்தின. இதில், அனைத்து ஆசிரியர் கல்வியியல் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
அப்போது, புதிய வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். வைப்புத் தொகை செலுத்துவதிலிருந்து அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதற்கு பதிலளித்துப் பேசிய என்.சி.டி.இ. தலைவர் சந்தோஷ் பாண்டா கூறியது:
புதிய வழிகாட்டுதல் என்பது உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் கல்வியியல் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும் இந்தப் புதிய வழிகாட்டுதல் வழிவகுக்கும். வழிகாட்டுதல் வெளியிடப்பட்ட பிறகு, அதைப் பின்பற்ற முடியாது; கால அவகாசம் தேவை என்று கூறுவதற்கெல்லாம் இடமே இல்லை.
ஒருவேளை சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் கல்லூரிகளின் மேலாண்மை சங்கத்துக்குச் சாதகமாகத் தீர்ப்பு அளித்தாலும், அதை எதிர்த்து என்.சி.டி.இ. போராடும். இது உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிகாட்டுதலாகும். அதைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை.
எனவே, நீதிமன்றம் சென்று நேரத்தையும் பணத்தையும் வீணடிப்பதைத் தவிர்த்து, கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு அதைச் செலவிட கல்வி நிறுவனங்கள் முயற்சிக்க வேண்டும்.
வருகிற 2015-16-ஆம் கல்வியாண்டு முதல் புதிய வழிகாட்டுதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது. அதாவது, 2015 அக்டோபர் 31-ஆம் தேதி இரண்டாண்டு பி.எட். படிப்பின் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். 2016 அக்டோபர் 31-ஆம் தேதி இரண்டாமாண்டு வகுப்புகள் தொடங்குவதற்கான அனுமதியை என்.சி.டி.இ. வழங்கும் என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக