இரண்டாண்டு பி.எட். கல்வித் திட்டத்தில் தகவல் தொழில்நுட்பக் கல்வி, யோகா கல்வி, பாலினக் கல்வி, மாற்றுத்திறன்- ஒருங்கிணைந்த கல்வி ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) தலைவர் சந்தோஷ் பாண்டா கூறினார்.
என்.சி.டி.இ. புதிய வழிகாட்டுதலின்படி பி.எட்., எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் 2015-16-ஆம் கல்வியாண்டு முதல் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.
இந்த இரண்டு ஆண்டு படிப்புகளுக்கான கல்வித் திட்டத்தையும் என்.சி.டி.இ. வெளியிட்டுள்ளது. இதை நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் கல்வியியல் கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும். அதன்படி, இரண்டாண்டு பி.எட். படிப்பில் தகவல் தொழில்நுட்பக் கல்வி, யோகா கல்வி, பாலினக் கல்வி, மாற்றுத்திறன்- ஒருங்கிணைந்த கல்வி ஆகிய 4 தலைப்புகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்றுநர்களும் யோகா கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், பி.எட். கல்வித் திட்டம் மூன்று முக்கியப் பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அதாவது, தியரி (பாடம்), செய்முறை பயிற்சி, தொழில் பயிற்சி (இன்டர்ன்ஷிப்) என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், தொழில் பயிற்சிக்கு மொத்த படிப்பு காலத்தில் 25 சதவீத காலத்தை ஒதுக்க வேண்டியது கட்டாயமாகும். இந்தக் கல்வித் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, பாடத் திட்டங்களை அவரவர்கள் வசதிக்கேற்ப வடிவமைத்துக் கொள்ளலாம்.
தனி படிப்பை வழங்கும் முறை நீக்கம்: கல்வித் திறனை மேம்படுத்தும் வகையிலும், திறன் மிக்க மனித வளத்தை உருவாக்கும் வகையிலும் விருப்பப் பாடத் தேர்வு முறையை (சி.பி.சி.எஸ்.) அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளும் அறிமுகம் செய்வதை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கட்டாயமாக்கியுள்ளது. இதேபோல், தொழில் படிப்புகளிலும் படிப்பின் பாதியில் விருப்பப் பாடத்தை தேர்வு செய்யும் வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
மேலும், ஆசிரியர் கல்வியியல் படிப்பிலும் புதியத் திட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஒரு பி.எட். படிப்பை மட்டும் வழங்கி வரும் "ஸ்டேன்ட் அலோன்' கல்வியியல் கல்வி நிறுவனங்கள் வருகிற மார்ச் மாதத்திலேயே மற்றொரு பி.எட். படிப்பைத் தொடங்குவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தாக வேண்டும். இல்லையெனில் அந்தக் கல்வி நிறுவனங்களுக்கான அனுமதி 2016-17-ஆம் கல்வியாண்டு முதல் ரத்து செய்யப்படும்.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தர அங்கீகாரம்: கல்வியியல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்.சி.டி.இ. சார்பில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய ஆய்வு அங்கீகார கவுன்சிலின் (நாக்) அங்கீகாரத்தைப் பெற வேண்டியது கட்டாயமாகும். மேலும், ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் இரு முறை நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆய்வை என்.சி.டி.இ. மேற்கொள்ளும். ஆய்வு முடிவுகள் அனைத்தும் அனைவருக்கும் தெரியும் வகையில், இணையதளத்தில் வெளியிடப்படும்.
தடையில்லாச் சான்று கட்டாயம்: தமிழகத்திலுள்ள கல்வி நிறுவனங்கள் அனுமதி நீட்டிப்பு அல்லது புதிய கல்வியியல் கல்வி நிறுவனம் தொடங்குவதற்கோ என்.சி.டி.இ.-யிடம் விண்ணப்பிக்கும்போது, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் தடையில்லாச் சான்று பெற்றிறுக்க வேண்டியது அவசியமாகும். வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில், முழுமையான மின் ஆளுமை முறையை என்.சி.டி.இ. அறிமுகம் செய்து வருகிறது. கல்வி நிறுவனங்கள் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், அனைத்து கல்வி நிறுவனங்களும் புதிய வழிகாட்டுதலில் குறிப்பிட்டுள்ளபடி, கல்வி நிறுவன இணையதளத்தை உருவாக்கியிருப்பதோடு, உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களின் முழு விவரங்களை அதில் பதிவேற்றமும் செய்திருக்க வேண்டும் என்றார் சந்தோஷ் பாண்டா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக