லேபிள்கள்

3.8.15

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு கூடுதலாக 37,000 மாணவர்கள் சேர்ப்பு

அரசுப் பள்ளிகளில் இந்தக் கல்வியாண்டில் (2015-16) 6, 9, 11-ஆம் வகுப்புகளில் 37,000 மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர்.இந்த வகுப்புகளில் கடந்த கல்வியாண்டில் (2014- 15) மொத்தமாக 11,03,297 பேர் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 11,40,636-ஆக அதிகரித்துள்ளது.ஆறாம் வகுப்பில் 6,462 மாணவர்கள் கூடுதலாகவும், 9-ஆம் வகுப்பில் 7,482 மாணவர்களும், 11-ஆம் வகுப்பில் 23,395 மாணவர்களும் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர்.


அதேநேரத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு 203 மாணவர்கள் மட்டுமே கூடுதலாகச் சேர்ந்துள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு, 9-ஆம் வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை தலா முறையே 3,194, 6,099 குறைந்துள்ளது. பிளஸ் 1 வகுப்பில் 9,496 மாணவர்கள் இந்த ஆண்டு கூடுதலாகச் சேர்ந்துள்ளனர்.


காரணம் என்ன? தனியார் பள்ளி மோகம் காரணமாக பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. ஆனால், இந்த ஆண்டு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறியது:அரசுப் பள்ளிகளில் கடந்த 2 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவது மிக முக்கியமான காரணமாகும். 

இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 84.26 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 89.23 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 1,164 அரசுப் பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றன.பொதுத்தேர்வுகளில் அதிகரித்துவரும் தேர்ச்சி விகிதம் காரணமாக அரசுப் பள்ளிகளின் மதிப்பு பொது மக்களிடையே உயர்ந்துள்ளது. இந்தத் தேர்ச்சி விகிதத்தை மேலும் அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேல்நிலை வகுப்புகளில் லேப்-டாப், சைக்கிள் போன்றவற்றை இலவசமாக வழங்குவதால் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் அதிகமான மாணவர்கள் சேருகின்றனர். 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பெரும்பாலான பள்ளிகளில் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன. பள்ளிகளில் தேவையான ஆசிரியர்கள் இருப்பதும் மாணவர்களின் சேர்க்கை அதிகரிப்பதற்குக் காரணம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

எல்.கே.ஜி. முதல் ஐந்தாம் வகுப்பு வரை நர்சரி பள்ளிகளில் குழந்தைகளை ஆங்கில வழியில் படிக்க வைக்கும் பெற்றோருக்கு மேற்கொண்டு படிக்கவைக்க வசதியில்லாத காரணத்தாலும், அரசுப் பள்ளிகளில் அதிகமான மாணவர்கள் சேருவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக