லேபிள்கள்

22.8.15

சி.பி.எஸ்.இ. உள்பட 533 பள்ளிகளுக்கு புதிதாகக் கட்டணம் நிர்ணயம்

சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 533 தனியார் பள்ளிகளுக்கு புதிதாகக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பான அறிவிப்பு தமிழக அரசின் ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

2015-16 முதல் 2017-18 கல்வியாண்டு வரை இந்தப் பள்ளிகளுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 15 சதவீதம் வரை இந்தப் பள்ளிகளுக்குக் கட்டண உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு வட்டாரங்கள் கூறியதாவது:

சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்பட பல்வேறு பள்ளிகள் கட்டண நிர்ணயத்தை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்திருந்தன. நீதிமன்ற உத்தரவுகளின்படி, இந்தப் பள்ளிகளுக்கு இப்போது புதிதாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதோடு, பல பள்ளிகளுக்கு 2014-15-ஆம் கல்வியாண்டோடு கட்டண நிர்ணயம் முடிவுக்கு வந்தது. சில பள்ளிகள் புதிதாகவும் கட்டண நிர்ணயத்துக்கு வந்தன. இவையனைத்தும் சேர்த்து மொத்தமாக 533 பள்ளிகளுக்கு இப்போது கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் நிர்ணயம் செய்யும் பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கப்பட்டு, அந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைகிறது. அடுத்த கல்வியாண்டுக்குள் அந்தப் பள்ளிகளுக்குக் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னையில் அதிகக் கட்டணம் எந்தப் பள்ளிக்கு?: இதுவரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதில் மிக அதிகமாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள நேஷனல் பப்ளிக் பள்ளிக்கு எல்.கே.ஜி. வகுப்புக்கு ரூ.38,800 ஆகவும், பிளஸ் 2 வகுப்புக்கு ரூ.43,300 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல, இந்தப் பள்ளிக்கு 2017-18-ஆம் கல்வியாண்டில் எல்.கே.ஜி. வகுப்புக்கு ரூ.46,948 ஆகவும், பிளஸ் 2 வகுப்புக்கு ரூ.52,393 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி, மயிலாப்பூரில் உள்ள வித்யா மந்திர் சீனியர் செகன்டரி பள்ளி, செட்டிநாடு வித்யாஷ்ரம் சீனியர் செகன்டரி பள்ளி, பத்ம சேஷாத்ரி பாலபவன் சீனியர் செகன்டரி பள்ளி, அடையாறில் உள்ள பால வித்யா மந்திர் பள்ளி உள்பட பல பள்ளிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக