சென்னை,திருத்தப்பட்ட சரியான முதுநிலை பட்டியலை வெளியிட வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பது உள்பட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வணிக வரித்துறை ஊழியர்கள்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வணிக வரித்துறை அலுவலக வளாகத்தில் கடந்த 3–ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். கடந்த 21 நாட்களாக வணிக வரித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், அரசு சார்ந்த பணிகள் முடங்கும் ஆபத்து ஏற்பட்டது.இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களின் பிரதிநிதிகள் நேற்று மாலை தமிழக அரசின் வணிக வரித்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அவருடன் வணிக வரித்துறை ஆணையர் எஸ்.கே.பிரபாகரன், இணை ஆணையர் பாலாஜி, செயலாளர் நஜுமுதீன் ஆகியோரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, போராட்டத்தை ‘வாபஸ்’ பெற்றுக்கொள்வதாக வணிக வரித்துறை ஊழியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வணிக வரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு மாநில செயலாளர் ஆர்.தமிழ்செல்வி கூறுகையில், ‘‘தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் எங்கள் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றி தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி தந்துள்ளனர். மேலும் திருத்தப்பட்ட சரியான முதுநிலை பட்டியலை ஒரு வாரத்துக்குள் வெளியிடுவதாக உறுதி அளித்திருக்கிறார்கள். எனவே இந்த போராட்டத்தை இந்தளவில் நாங்கள் முடித்துக்கொண்டோம். நாளை (இன்று) வழக்கம்போல வணிக வரித்துறை ஊழியர்கள் பணிக்கு செல்வார்கள்’’, என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக