லேபிள்கள்

11.3.16

மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டிய ஆங்கிலப் பாடத் தேர்வு

பிளஸ் 2 ஆங்கிலப் பாடத் தேர்வுகள் மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தன. இதைத் தொடர்ந்து, பிரதான பாடத் தேர்வுகள் 14-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.
தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்வுகளை 8 லட்சத்து 39,697 மாணவ - மாணவிகள், 42,347 தனித் தேர்வர்கள் எழுதி வருகின்றனர்.
ஆங்கிலம் 2-ஆம் தாள் தேர்வு வியாழக்கிழமை நடைபெற்றது. முதல் தாளைப் போலவே ஆங்கிலம் 2-ஆம் தாளும் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
"தமிழ் முதல் தாள் தேர்வில் சில எதிர்பாராத வினாக்கள் இருந்ததால் அதைப் போலவே ஆங்கிலப் பாட வினாத்தாளும் இருக்கும் என்று நினைத்து அச்சத்தில் இருந்தோம். மாறாக, ஆங்கிலப் பாடத்தின் இரு தாள்களுமே முந்தைய பொதுத் தேர்வுகளில் கேட்கப்பட்டிருந்த வழக்கமான வினாக்களுடனேயே இருந்தன. இதனால், ஆங்கிலத்தில் அதிகமான மதிப்பெண்களைப் பெற முடியும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது' என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
4 பேர் பிடிபட்டனர்: இதற்கிடையே, ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக தஞ்சையில் 2 பள்ளி மாணவர்களும், சேலத்தில் ஒரு மாணவரும், அரியலூரில் ஒரு தனித் தேர்வரும் பிடிபட்டனர். மொழிப் பாடம், ஆங்கிலப் பாடத் தேர்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வேதியியல், கணக்குப் பதிவியல் தேர்வுகள் 14-ஆம் தேதி நடைபெறுகின்றன.
விடைத்தாள் திருத்தும் பணி: பிரதான பாடத் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், இதுவரை நடைபெற்ற பாடங்களின் விடைத் தாள்களைத் திருத்தும் பணி வரும் 16-ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக, விடைத்தாள்களைப் பிரித்து அவற்றை விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற உள்ளது.
விடைக் குறிப்புகளை சம்பந்தப்பட்ட மாவட்ட மையங்களுக்கு அனுப்பும் பணி 14-ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக