அரசு ஊழியர்களுக்கு எதிராக, பெயர் தெரிவிக்காமல், அல்லது பொய் பெயர்களில் அளிக்கப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்' என, மத்திய அரசின் துறைகளுக்கு, சி.வி.சி., எனப்படும், மத்திய ஊழல் கண்காணிப்பு கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும், பொதுத்துறை நிறுவனங்களுக்கும், சி.வி.சி., அனுப்பியுள்ள உத்தரவு விவரம்:அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு எதிராக, புகார் அளிப்போர், தம் பெயர் உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும்.
பெயர் குறிப்பிடாமலோ, பொய்யான பெயர்களுடனோ, அரசு ஊழியர்களுக்கு எதிராக வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம். இத்தகைய புகார்களை, கோப்புகளில் வைத்தால் போதும். இது தொடர்பாக, 1999ல், சுற்றோலை அனுப்பப்பட்டது. அதற்கு முன், புனை பெயர்களில் அல்லது பெயர் குறிப்பிடாமல் வந்த புகார்கள் மீது துவங்கிய நடவடிக்கைகளை, முடித்து வைக்க வேண்டும். இப்புகார்கள் மீது நடந்த விசாரணைகளில் கிடைத்த ஆதாரங்களை, எதிர்காலத்தில், ஒழுங்கு நடவடிக்கைகள், நன்னடத்தை பிறழ்வு போன்ற புகார்கள் வரும்போது, பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பொய் புகார் ஏன்?பொய்யான பெயர்களில் புகார்கள் வருவது குறித்து, மூத்த அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் கூறுகையில், 'அரசு ஊழியர்கள் பதவி உயர்வு பெறும் சமயத்தில் அல்லது வேறு முக்கியமான பணியில் ஈடுபடுத்தப்படும்போது, சம்பந்தப்பட்ட ஊழியருக்கு, புலனாய்வுத் துறை அனுமதி கிடைப்பதை தாமதப்படுத்தும் நோக்கில், பொய் புகார்கள் கூறப்படுகின்றன' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக