லேபிள்கள்

9.3.16

பி.எப். வரிவிதிப்பு திட்டத்தை கைவிட்டது மத்திய அரசு

பி.எஃப். தொகை எடுப்பில் 60% தொகைக்கு வரிவிதிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடுவதாக அருண் ஜேட்லி செவ்வாயன்று அறிவித்தார்.

2016-17-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்த அருண் ஜேட்லி, ஏப்ரல் 1, 2016-க்குப் பிறகான பி.எஃப். பிடித்தத் தொகையில் எடுப்பின் போது 60% தொகைக்கு வரிவிதிக்கும் திட்டத்தை அறிவித்தார்.



இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. தொழிற்சங்கங்கள் மற்ற எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்ததோடு தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தே இதற்கு எதிர்ப்பு கிளம்பியது, குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். சார்பு தொழிற்சங்கம் இந்த வரிவிதிப்பை இரட்டை வரிவிதிப்பு என்று கடுமையாக சாடியது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இது குறித்து அறிவிப்பு வெளியிட்ட அருண் ஜேட்லி, “இத்திட்டம் குறித்த கருத்துகளின் அடிப்படையில், பல்வேறு கோணங்களில் மத்திய அரசு பி.எஃப். வரிவிதிப்புத் திட்டத்தை ஆய்வு செய்ய விரும்புகிறது, எனவே இந்த வரிவிதிப்புத் திட்டத்தை மத்திய அரசு கைவிடுகிறது” என்றார்.

முன்னதாக இந்தத் திட்டம் குறித்து பல குழப்பமான அறிவிப்புகள் வெளியாகின, பி.எஃப். தொகையின் மீதான வட்டிக்குத்தான் வரி என்று முதலில் விளக்கம் அளிக்கப்பட்டது, பிறகு அருண் ஜேட்லி தொழிற்துறை கூட்டமைப்பினரிடையே கூறும்போது, அதாவது முழு பி.எஃப். தொகையையும் எடுத்தால் 60% எடுப்புத் தொகைக்கு வரி விதிக்கப்படும் என்றும் மாறாக அந்த 60% தொகை ஏதாவது பென்ஷன் திட்டத்தில் சேர்க்கப்பட்டால் அதற்கு வரிவிதிப்பு கிடையாது என்றும் கூறினார்.

இந்த விளக்கத்திற்கு தொழிற்சங்கங்கள், கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதாவது ஊழியர்கள் பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தேயாக வேண்டும் என்பதை மறைமுகமாக கட்டாயப்படுத்துகிறது இது என்று சாடினர்.

அதாவது தங்கள் பணத்தை எங்கு, எதில் முதலீடு செய்வது என்பதைத் தேர்வு செய்ய ஊழியர்களுக்கே உரிமை உள்ளது என்ற வாதத்தை இவர்கள் முன்வைத்தனர்.

இதற்கு, அருண் ஜேட்லி, வருவாயை அதிகரிக்க இந்த வரிவிதிப்பு இல்லை மாறாக அனைவரையும் பென்ஷன் திட்டத்தில் சேரவைப்பதே நோக்கம் என்றார்.

ஆனால், கடைசியில் பிரதமர் பார்வைக்கு இது குறித்த அனைத்து கருத்துக்கள், வரிவிதிப்பின் விளைவுகள் ஆகியவை கொண்டு செல்லப்பட்டன. இதனையடுத்து செவ்வாயன்று அருண் ஜேட்லி பி.எஃப். வரிவிதிப்பு திட்டம் கைவிடப்பட்டதாக அறிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக