லேபிள்கள்

5.5.16

கருணை மதிப்பெண்ணுக்கு எதிராக வழக்கு: பிளஸ் 2 தேர்வு முடிவுகளை நிறுத்திவைக்க உயர் நீதிமன்றம் மறுப்பு.

வேதியியல் பாடத்தில் இரு கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்குவதற்கு எதிரான மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம்
விடுமுறை கால அமர்வு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்து விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு 4.3.2016 முதல் 1.4.2016 வரை நடைபெற்றது. வேதியியல் தேர்வு மார்ச் 14-ல் நடைபெற்றது.வேதியியல் தேர்வில் பிரிவு 1-ல் 18--வது வினாவும் (ஒரு மதிப்பெண்), பிரிவு 4-ல் 70--வது கேள்வி (5 மதிப்பெண்) தவறாக கேட்கப்பட்டதாகவும், இதனால் வேதியியல் தேர்வை மீண்டும் நடத்த அரசுக்கு மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து தவறாக கேட்கப்பட்ட இரு கேள்விகளுக்கு பதிலளிக்க முயன்ற மாணவர்கள் அனைவருக்கும் கருணை அடிப்படையில் 6 மதிப்பெண் வழங்க மார்ச் 21-ல் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.இந்நிலையில் கருணை மதிப்பெண் வழங்க தடை விதிக்கக்கோரி நெல்லையைச் சேர்ந்த பேராசிரியர் பேராசிரியர் எஸ்.சாமுவேல் ஆசிர்ராஜ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:என் மகன் எஸ்.ரிச்சர்டுசாமுவேல் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறான். அவனுக்கு மருத்துவம் படிக்க விருப்பம். இதற்காக பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக இரவு முழுவதும்கண்விழித்துப் படித்தான். பிளஸ் 2 பொதுத்தேர்வில் வேதியியல் பாடத்தில் பிரிவு 1-ல் 18 வது கேள்வி, பிரிவு 4-ல் 70-வது கேள்வி ஆகிய மிகவும் கடினமானது. வேதியியல் பாடத்தை முழுமையாக படித்த திறமையான மாணவர்களால் மட்டுமே இவ்விரு கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியும். இந்த சிக்கலான கேள்விகளுக்கு என் மகன் உள்பட ஏராளமான மாணவர்கள் சரியாக பதிலளித்துள்ளனர்.

இந்நிலையில் இவ்விரு கேள்விகளுக்கும் பதிலளிக்க முயன்றஅனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்க அரசு தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இது சட்டவிரோதம். அந்த இரு கேள்விகளும் பாடத்திட்டத்தில் உள்ள கேள்விகள் தான். 

பாடத்திட்டத்தைச் சாராத, வெளியில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி அல்ல. இதனால் அந்த கேள்விகளுக்கு பதிலளிக்காதது மாணவர்கள் தவறு தான். கருணை மதிப்பெண் வழங்கும் போது அந்த கேள்விகளுக்கு சரியான பதில் அளித்த வேதியியல் பாடத்தில் திறமையான மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.இதனால் இரு கேள்விகளுக்கும் சரியாக பதிலளித்த மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண் வழங்கவும், கருணை மதிப்பெண் வழங்கக்கூடாது என்றும் உத்தரவிட வேண்டும். அதுவரை பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பி.என்.பிரகாஷ் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்க உத்தரவிட மறுத்து, பதில் மனுத் தாக்கல் செய்ய பள்ளிக்கல்விச் செயலர், தேர்வுத்துறை இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், பள்ளி கல்வி இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.பின்னர் அடுத்த விசாரணையை ஜூன் மாதத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக