லேபிள்கள்

11.9.16

2 கல்வி அதிகாரிகளின் இடமாறுதல் உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்

போலி கடிதத்தை ஆதாரமாக வைத்து கல்வித் துறை அதிகாரிகள் இருவரை இடமாறுதல் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஆர்.கணேசன், கல்வி அதிகாரி யு.ராஜன் ஆகிய 2 பேரையும் பணியிட மாறுதல் செய்து மே மாதத்தில் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு, லஞ்சம் கேட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரகம் எனும் பெயரில் வந்த கடிதத்தின்பெயரில் பிறப்பித்த இடமாறுதல் உத்தரவு சட்ட விரோதமானது. ஆகவே, இதை ரத்து செய்ய வேண்டும்' என்று கோரியிருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு நடைபெற்றது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் டி.ஆனந்தி, "குற்றச்சாட்டு கடிதம் மனுதாரர்களுக்கு வரவில்லை. பார்க்க மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடிதத்தின் உண்மைத் தன்மை குறித்து கூட விசாரிக்காமல், இருவரையும் இடமாறுதல் செய்துள்ளனர்' என்றார்.
இதையடுத்து, கூடுதல் அரசு வழக்குரைஞர், "இதுபோல் எந்தவொரு கடிதத்தையும் லஞ்ச ஒழிப்புத் துறை அனுப்பவில்லை' என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:-
புகார் கடிதம் வந்தால், உண்மைத் தன்மையைக் கூட ஆராயாமல், குறைந்தபட்சம் விசாரணையும் நடத்தாமல் இடமாறுதல் செய்திருப்பது சட்டப்படி தவறு. போலி கடிதத்தை ஆதாரமாக வைத்து இடமாறுதல் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இருவரும் விடுப்பில் இருந்த நாள்களையும் பணியில் இருந்ததாகக் கருதி அதற்கான பலன்களை வழங்க வேண்டும். போலி கடிதம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் சட்டத்துக்குள்பட்டு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக