தகவல் தொழில்நுட்பம் சார்ந்த புதுமை கற்பித்தலுக்கான முறை யில், கிராமப்புற மாணவர்கள் கல்வி பயில துவங்கியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் ஆசிரியர்களுக்கான தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்பம் சார்ந்த புதுமை கற்பித்தல் போட்டி நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் இருந்து இரு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.அதில், கோத்தகிரி அருகேயுள்ள தேனாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் தர்மராஜ் விருது பெற்றார். ஜனாதிபதியால் வழங்கப்பட்ட விருதில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள கம்ப்யூட்டர் சார்ந்த உபகரணங்கள் வழங்கப் பட்டுள்ளன.
இதில்,'லேப்-டாப்', தேசிய கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் சார்பில், அனைத்து பாடங்களும், அனைத்து மாநிலங்களுக்கும் பொருத்தமான வகையில் அனிமேஷன், வீடியோ பதிவு மூலம் தயாரிக்கப்பட்டுள்ள, 20 டிவிடி.,க்கள் வழங்கப்பட்டுள்ளன.அது தவிர, 'லேப்-டாப்' மூலம் ஒளி, ஒலி காட்சி மூலம், 'ரிமோட்' உதவியுடன், மாணவ, மாணவியர்க்கு பாடங்களை கற்பிக்க, புளுடூத் மைக், மவுஸ், ஸ்பீக்கர் உட்பட நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எலக்ட்ரான்ஸ், புரோட்டான்ஸ் அளவீடு செய்வதற்குரிய சிறிய உபகரணம், பாடங்களை விளையாட்டின் மூலம் கற்பிக்க உபகரணம், 'மெமரி கார்டு' போன்றவையும் வழங்கப்பட்டுள்ளன. பொதுவாக, இத்தகைய தகவல் தொழில்நுட்ப விருதுகள், உயர், மேல்நிலைக் கல்வி சார்ந்த ஆசிரியர்களுக்கே வழங்கப்படுவது வழக்கம்; முதன் முறையாக, அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஆசிரியருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளதன் மூலம், கிராமத்து மாணவர்கள் கூட, கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் கல்வி பயின்று, தங்களின் அறிவாற்றலை வளர்த்து வருகின்றனர்.
இதுகுறித்து, விருது பெற்ற ஆசிரியர் தர்மராஜ் கூறுகையில், “இக்கம்ப்யூட்டர் உபகரணங்கள் மூலம், குழந்தைகளுக்கு கல்வி போதிப்பது, அவர்களுக்கு சிறந்த முறையில் பயனளிக்கும்; அவர்களின் கற்பனைத் திறன் மேம்படும்,” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக