மாணவ, மாணவிகளை தலைமையாசிரியை அடித்து காயப்படுத்துவதாக கூறி, அரசு பள்ளிக்கு கிராம மக்கள் பூட்டு போட்ட சம்பவம் போடி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம், போடி அருகே கரட்டுபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 250 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தலைமையாசிரியையாக மகாலட்சுமி மற்றும் 10 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். தலைமையாசிரியை, ஆசிரியர்களை தரக்குறைவாக பேசுவதாகவும், மாணவ, மாணவிகளை அடித்து காயப்படுத்துவதாகவும் கரட்டுப்பட்டி மக்கள் ெதாடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இவரை பணியிட மாற்றம் செய்யக்கோரி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.
தொடர்ந்து புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரம் அடைந்த கரட்டுப்பட்டி மக்கள் நேற்று பள்ளியின் கேட்டை பூட்டினர். பின்னர் மாணவர்களை எதிரேயுள்ள மரத்தடியில் அமர வைத்தனர். இதனால் தலைமையாசிரியை மகாலட்சுமி, ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் வாசலில் நின்றிருந்தனர். தகவலறிந்த போடி புறநகர் ேபாலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ‘அரசு பள்ளியை பொதுமக்கள் பூட்டுவதற்கு அதிகாரம் இல்லை. கல்வித்துறை உயரதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார்கள்’ என தெரிவித்தனர். இதையடுத்து காலை 11.30 மணிக்கு பள்ளி திறக்கப்பட்டு செயல்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், தலைமையாசிரியை மகாலட்சுமி மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக