திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த ஆலங்காடு கிராமத்தில், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி அமைந்திருக்கிறது. இந்தப் பள்ளியின் ஆண்டுவிழா,
தலைமையாசிரியர் கருணாநிதி மற்றும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மோகன், குணசேகரன் தலைமையில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ரேவதி, சுதா, அன்புச்செல்வி, லெட்சுமி ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளிக்குத் தேவையான உபயோகப் பொருள்களைச் சீர்வரிசையாக மேளதாளத்துடன் ஊர்வலமாய் எடுத்துவந்தனர். அவர்களை, ஆசிரியர்கள் வாசலில் சந்தனம் கொடுத்தும், நெற்றில் திலகமிட்டும் வரவேற்றார்கள்.
பள்ளிக்கும், கல்விக்கும் சிறப்புச்செய்த கிராம மக்களின் செயல்குறித்து தலைமையாசிரியர் கருணாநிதி கூறுகையில், “இந்தக் கிராம மக்கள் போலவே அவர்களது குழந்தைகளும் கண்ணியத்துடன் பழகக்கூடியவர்கள். இந்தப் பள்ளிக்குப் பெருமைசேர்க்கும் வகையில், மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றிருக்கிறார்கள். எல்லா வகையிலும் பள்ளிக்கு உறுதுணையாக கிராமத்தினர் இருப்பது பெருமையான விஷயம். இந்தாண்டு நாங்களே எதிர்பார்க்காத வகையில், கிராம மக்கள் அனைவரும் அவர்கள் வீட்டு விசேஷம்போல பள்ளிக்குத் தேவையான பொருள்களை சீர்வரிசையாகக் கொண்டுவந்து கொடுத்திருப்பது சந்தோஷத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நெகிழ்ச்சியான இந்த நிகழ்வால், மேலும் சிறப்பாகப் பணிபுரியவேண்டும் என்ற உற்சாகத்தை ஆசிரியர்களுக்குக் கொடுத்திருக்கிறது” என்றார்.
ஆலங்குடி கிராமத்தினரின் செயலை அனைவரும் பின்பற்றலாமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக