லேபிள்கள்

17.11.17

தலைமை ஆசிரியர்களுக்கு எகிறும் சம்பளம் : கூடுதல் பொறுப்பு வழங்க அரசு திட்டம்

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள், 1.25 லட்சம் ரூபாய் சம்பளம் பெற உள்ளனர்.
அதனால், அவர்களுக்கு கூடுதல் பணி வழங்க, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.   தமிழகத்தில், 57 ஆயிரம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில், 1.30 கோடி மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளிகளில், 5.58 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதில், அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆறு லட்சம் ஆசிரியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. 

இதை கணக்கிடும் போது, அதிகபட்சமாக, 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும், முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, 1.25 லட்சம் ரூபாய் வரை சம்பளம் உயர்ந்துள்ளது. இதைக் கண்டு, அதிகாரிகளே அதிர்ச்சியில் உள்ளனர். இத்துறையின் அதிகாரிகளுக்கே, அதிகபட்சம், 90 ஆயிரம் ரூபாய் தான் சம்பளம் கிடைக்கும் நிலையில், தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் அதிக சம்பளம் பெறுவது, பள்ளிக்கல்வி, நிதித்துறை அதிகாரிகள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.  

இந்த சம்பள உயர்வால், அரசுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வகையில், தலைமை ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்புகளை வழங்கலாம் என, ஆலோசனை நடந்து வருகிறது. நகர, ஊரக பகுதிகளில், மாணவர் குறைவாக உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, கூடுதலாக சில பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பையும் இணைத்து வழங்கலாமா அல்லது கல்வி அலுவலக பொறுப்புகளை பகிர்ந்தளிக்கலாமா என, ஆலோசனை நடந்துள்ளது.

 அதேபோல், மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கும், கூடுதல் பாட வகுப்புகள் மற்றும் சிறப்பு பயிற்சி பணிகள் வழங்குவது குறித்து, அதிகாரிகள் பரிசீலினை செய்வதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக