எம்.பி.,- - எம்.எல்.ஏ., நிதியில் கட்டப்படும், பள்ளி கட்டடங்கள் தரமின்றி இருப்பதால், அவற்றை தவிர்க்க, தலைமை ஆசிரியர்கள் திணறுகின்றனர். தமிழகத்தில், 5,500க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன.இவற்றில், புதிய வகுப்பறைகள் தேவைப்படும் பள்ளிகளுக்கு, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம், அனைவருக்கும் கல்வி திட்டம், 'நபார்டு' உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம், வகுப்பறைகள் கட்டப்படுகின்றன. எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களும், தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி நிதியில், பள்ளிகளுக்கு, வகுப்பறைகள் கட்டித் தருகின்றனர்.
ஆனால், ஏற்கனவே, இந்த நிதியில் கட்டப்பட்ட பல வகுப்பறைகளின் தரம், கேள்விக்குறியாக இருப்பதால், தலைமை ஆசிரியர்கள், இதை விரும்புவதில்லை.
25 ஆண்டுகள் : அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: புதிதாக கட்டப்படும் வகுப்பறை கட்டடங்களின் ஆயுள், 25 ஆண்டுகள் என, வரையறுக்கப்பட்டு உள்ளது. ஆனால், எம்.பி., - எம்.எல்.ஏ., நிதியில் கட்டப்படும் கட்டடங்களில், பெரும்பாலானவை, ஓரிரு ஆண்டுகளில் பழுதடைந்து விடுகின்றன.காரை பெயர்வது, தரமற்ற தளம், விரிசல் உள்ளிட்டவை ஏற்படுவதுடன், ஐந்து ஆண்டுகளுக்கு கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
முழுக்க முழுக்க, ஒப்பந்ததாரரின் கட்டுப்பாட்டில் மட்டுமே கட்டப்படுவதால், இக்கட்டடங்களின் தரத்தை, பொதுப்பணி, பள்ளிக்கல்வித் துறைகள் என, எதுவும் கண்காணிப்பதும் இல்லை.
ஒப்பந்ததாரரும், 'பலருக்கு கமிஷன் வழங்க வேண்டி இருப்பதால், இதற்கு மேல் தரமாக கட்ட முடியாது' என, வெளிப்படையாகவே கூறுகிறார்.
நாங்களே பொறுப்பு : கட்டடத்துக்கோ, குழந்தைகளுக்கோ சேதம் என்றால், அதற்கு நாங்களே பொறுப்பேற்க வேண்டி உள்ளது. இதனால், பல பள்ளிகளில், எம்.பி., - எம்.எல்.ஏ., நிதியில் கட்டப்பட்ட வகுப்பறைகளை, குடோன்களாகவும், வேறு பயன்பாட்டுக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது.பல்வேறு திட்டங்களில், பொதுப்பணித் துறை மூலம், வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவதால், எம்.பி., - எம்.எல்.ஏ., மூலம் வரும் கட்டடங்களை, நாங்கள் விரும்புவதில்லை.
இருப்பினும், பலர் வலுக்கட்டாயமாக திணிக்கும் போது, என்ன செய்வதென தெரியாமல் தவிக்கும் நிலை உள்ளது.எனவே, பள்ளிகளில் எந்த நிதியில் வகுப்பறை கட்டினாலும், அதன் தரத்தை கண்காணிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக