லேபிள்கள்

16.11.17

அரசு பள்ளியும், மாணவர் சேர்க்கையும்…

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வழிவகைகளை கல்வித்துறை செய்துகொண்டுதான் இருக்கிறது. ஆன போதிலும், தமிழகத்தில் உள்ள 37,141 (2014-15) அரசு பள்ளிகளில் 1 – 5 ஆம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 24,73,356 பேர். ஆனால் 57,192 தனியார் பள்ளிகளில் சேர்ந்த
மாணவர்களின் எண்ணிக்கை 32,73,884 பேர். இதேபோன்று 6 முதல் 8 வகுப்பு மாணவர்களும் அரசு பள்ளியை விட தனியார் பள்ளிகளில் தான் மாணவர் சேர்க்கை அதிகளவு உள்ளது.


இதில் மிகவும் வருத்தமான செய்தி கடந்த 2014-ஆம் ஆண்டு வரை நாடு முழுவதிலும் சுமார் 80,647 பள்ளிகள் இதர பள்ளிகளோடு இணைக்கப்பட்டு (அ) மூடப்பட்டும் உள்ளன.

ஆசிரியர்-மாணவர் விகிதம் 1:40 என இருந்து வந்த நிலையில் தற்போது 1:24 ஆக மாறியுள்ளது. இதற்கான காரணம் மாணவர்களின் எண்ணிக்கையின் குறைவுதான். மேலும், 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை ஒரு பள்ளிக்கு அதிக பட்சமாக இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். தலைமையாசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் மட்டும். இவர் அலுவலக பணியின் காரணமாக வெளியில் சென்றால் ஆசிரியர் ஒருவர் மட்டுமே மொத்த மாணவர்களையும் பார்க்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. இதனால் ஏற்படும் விளைவு என்ன?? அரசுக்கு இதனால் ஏற்படும் நஷ்டம் அதிகம் என்றே தரவுகள் கூறுகின்றன.

மேலும், இதைத் தவிர்த்து பல காரணங்களை முன் வைக்கலாம். தரமான கல்வி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சுகாதாரமான சுற்றுச்சூழல், கட்டிட வசதி, நூலக வசதி உள்ளிட்ட பல காரணங்களால் மாணவர்களின் எண்ணிக்கை அரசு பள்ளிகளில் குறைந்து காணப்படுகிறது. அவற்றைப் பற்றி சற்று விரிவாக காண்போம்,

பெற்றோர் ஆசிரியர் உறவு:

அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று பெற்றோர்-ஆசிரியர் உறவு:

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எத்தனை பெற்றோர் தங்களது பிள்ளைகளின் நிலையை அறிய முன் வருகிறார்கள்..?? மாணவர்களின் நிலையை கட்டாயம் எடுத்துக் கூறுவது ஆசிரியர் கடைமை. தனியார் பள்ளிகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாணவர்களின் நிலையை அறிய முற்படுகின்றனர். காரணம் பணம். அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாக கல்வியை வழங்குவது காரணமானாலும் பெற்றோர்களை வரவழைக்க வேண்டும். மாணவனின் நிறைகுறைகளை அறியச் செய்தல், பெற்றோரின் மனதில் ஆசிரியர், நிர்வாகம், பள்ளி பற்றிய நல்ல சிந்தனை மேலோங்கும்.

வரமுடியாத சூழ்நிலை என்றால் அவர்களுக்கு தகுந்த நேரத்தை ஆசிரியர் உருவாக்கித் தரவேண்டும். ஏனெனில், நல்ல மாணவனை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியரிடமே உண்டு. இதன் மூலமே பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.மேலும், ஆசிரியர்-மாணவர் உறவும் நன்றாக வலுப்பெற்று அமைய வேண்டும். ஆகவே, அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆசிரியர்-பெற்றோர், ஆசிரியர்-மாணவர் நல்லுறவு முக்கியமானதாக கருதப்படுகிறது.

அடுத்ததாக முன்வைக்கும் கருத்து தலைமை. “தலைமை” சரியில்லாத போது பள்ளியின் தரத்தை முன்னேற்றுவது கடினம். தலைமையாசிரியர் அவருக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை கவனம் செலுத்தி முடிப்பார். ஆனால், ஆசிரியர், அவரது செயல்பாடுகளை நன்கு கவனம் செலுத்தி பார்க்க வேண்டும்.

ஆசிரியரின் பணிகளையும், மாணவர்களை ஆசிரியர் கற்றல்-கற்பித்தல் அடைவுகளை சோதிக்கும் முறையை கட்டாயமாக தலைமையாசிரியர் கவனிக்க வேண்டும்.

சில பள்ளியில்  அல்லது தனியார் பள்ளியில் தலைமையில் இருக்கும் நபரின் கற்பிக்கும் ஆசிரியரின் பண்புகளையும், கற்பிக்கும் முறைகளையும் ஆராய்ந்து அது சரியில்லாத பட்சத்தில் பணியை விட்டு நீக்கப்படுகின்றார். எனவே தான் மிகுந்த கவனத்துடன் ஆசிரியர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். மேலும் குறிப்பிட்ட மாணவர்களின் நிலையை அறிந்து கற்பித்தலை மீண்டும் மீண்டும் செய்கின்றனர். விளைவு மாணவர்களின் கற்றல் வீதம் உயர்ந்து, மாணவகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

ஆனால், அரசு பள்ளியில் ஆசிரியரின் பணிகளை ஆராய்ந்து பார்க்கலாம் தவிர பணியை விட்டு நீக்கம் செய்யவோ முடியாத காரியம்.ஆசிரியர்கள் அனைவரும் முன்வந்து  அக்கறையுடன் செயல்படவேண்டும்.

                                                         


  குறிப்பு:”30மாணவர்கள் அரசுப்பள்ளியில் சேர்ந்தால் ஓர் ஆசிரியர் குடும்பமே வாழ்வு பெறும்”.மறவாதீர்

 ஆக பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், குறைக்கவுமான     மந்திரம், தந்திரம் எல்லாம் ஆசிரியரிடமே உண்டு.



           தனியார் பள்ளிகளின் மோகம் அதிகரிக்க காரணம் Uniform, Tie-யும் கூட; அரசு பள்ளியில் சமமான சீருடை வழங்கினாலும், மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கூடுதலாக வழங்கலாம். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உள்ள பொறுப்புணர்ச்சி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இல்லை. அவர்களின் மனநிலை மற்றும் அப்போதைய சூழ்நிலையில் உள்ள நிலையைப் பொருத்தே வகுப்பறை அமையும். எனவே, இடைப்பட்ட நேரத்தில் தலைமையாசிரியர்-ஆசிரியர் கலந்தாய்வு முக்கியம்.

தனியார் பள்ளிகளில் ஏற்படுத்தித் தரும் Smart Class, அரசு பள்ளிகளிலும் ஏற்படுத்தித் தர வேண்டும். இலவசமாக வழங்கப்படும் மடிக்கணினியை கற்பிக்க தகுதிவாய்ந்த கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். பள்ளிக்கு ஒரு தரமான கணினி ஆய்வகம் அமைத்து தனியார் பள்ளிக்கு இணையாக 1-ஆம் வகுப்பு முதலே கணினியை கற்பிக்க வேண்டும். அந்தந்த துறையில் தேர்ந்தவர்களைக் கொண்டு ஒவ்வொரு பாடத்தையும் கற்பிக்க வேண்டும். பெற்றவள் மட்டுமே தன் பிள்ளையை அக்கறையுடன் கவனிப்பாள். அதேபோன்று அந்த துறை வல்லுநர்களால் மட்டுமே எளிமையுடனும், அறிவை விரிவுபடுத்தும் வகையிலும் கற்பிக்க முடியும்.

தனியார் பள்ளிகளில் ஓவியம், கராத்தே, யோகா, இசை, விளையாட்டு போன்ற “கூடுதல் திறன்கள் கொண்ட கல்வியும் (Extra Curricular Activites)”பின்பற்றப்படுகின்றன. இதன் காரணமாகவும் பெற்றோர்களிடையே தனியார் பள்ளி மோகம் அதிகரித்து வருகின்றது. அரசு பள்ளிகளில் இவற்றை தரமான முறையில் வழங்கிட வேண்டும். பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியரையாவது நியமனம் செய்ய வேண்டும்.

அதாவது, (1-5), (6-8), (9-10) (11-12)என்ற நிலைகளில் நியமிக்க வேண்டும். கணினி, ஓவியம், இசை, யோகா ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும்.

தனியார் பள்ளியில் படித்தால் மட்டுமே மாணவர்களின் எதிர்காலம் நன்றாக அமையும் என எண்ணும் பெற்றோர்களே, அதிகம் பொருளாதாரம் இல்லாத பின்தங்கிய நிலையிலும் Matric, CBSE –பள்ளிகளில் படிக்க வைக்கவே விரும்புகின்றனர். காரணமான மற்றொன்று “ஆங்கிலம்” பேசுதல் கட்டாய சூழ்நிலையை ஏற்படுத்தி மாணவர்களை பேசவைக்கின்றனர். Result, English Speech இதையே அடைவாகக் கொண்டு செயல்படுகின்றன ‘தனியார் பள்ளிகள்’.

எனவே, அரசு பள்ளியிலும் மாணவர்களை ஆங்கிலம் பேச வைக்க வேண்டும். தனியார் பள்ளிக்கு சமமான பாடங்கள், சமச்சீர் கல்வி இருந்தபோதிலும் ஆங்கிலத்தில் பாடம் கற்பிக்க ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் நியமிக்கவில்லை. ஏனோ தானோ என்றே இருக்கின்றன.

மாணவர்களுக்கு Phonetics-யை கற்பிக்க வேண்டும். மேலும், பாடத்திட்டத்தினை மாற்றியமைக்க வேண்டும். மாணவர்களின் நிலைக்கினங்க கற்பிக்க வேண்டும். தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க பள்ளிக்கு ஒரு ஆசிரியரை கூடுதலாக நியமிக்க வேண்டும். மேலும் அவர்களின் மனநிலையை பாதிக்கும்படி நடந்துகொள்ளக்கூடாது.

ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தி வெளிப் பள்ளிகள் மற்றும் மாவட்ட அளவில் விளையாட்டு போட்டியில் பங்குபெறச் செய்தல் வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் வசதி இல்லாத சூழலில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் (PTA) அதற்கான நிதியை ஏற்படுத்தித் தர ஆசிரியரே உக்கப்படுத்த வேண்டும்.

மேலும், தனியார் பள்ளிகளில் 1-5 வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கும் போது அன்றைய தினம் வித்தியாசமான ஆடை, உணவு, குறிப்பிட்ட சில பொருட்களை கொண்டு வந்து கற்பிக்கின்றனர். அரசு பள்ளியிலும் அதைப் பின்பற்ற வேண்டும். உதாரணமாக ஆப்பிள் நிறம் “சிவப்பு” என்று சிவப்பு நிறம் பற்றிய தகவலை கூறுவர். அரசு பள்ளி முடியாத பட்சத்தில் தனக்கு அருகில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கற்பிக்கலாம்.

சிவப்பு நிறத்தை கற்பிக்க கோவை பழத்தையோ, செம்பருத்தி பூ ஆகியவற்றைப் பயன்படுத்தி கற்பிக்கலாம். இதைத்தான் பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.இதை தவிர அன்பு சார் பெற்றோர்களே ஆங்கிலம் கல்வி அல்ல மொழி என்பதை உணர வேண்டும்..

அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கு யோசிக்க மற்றொரு காரணம் “Gang Formation”. ஒரு வகுப்பறையில் 40 மாணவர்களில் 39 பேர் படித்து ஒருவர் படிக்காத நிலையில் அந்த மாணவரே அவர்களை பார்த்து திருந்தும் வாய்ப்பு அதிகம். அதற்கான முயற்சியும் ஆசிரியர் கையில் உள்ளது. மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவரவருடைய திறமைகளை வெளிக்கொண்டுவருவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தர வேண்டும்.

இதற்கென சிறு தலைப்புகள் கொடுத்து பேசச் சொல்லுதல், வரைதல், ஓவியம், கவிதை என அனைத்து மாணவர்களையும் பங்குபெறச் செய்வதன் மூலம் Gang Formation-யை தடுக்கலாம். மாணவர்களுக்கு எது, எந்த செயல் பெருமையை உண்டாக்கி அவனை உயர்ந்தவனாக காண்பிக்கும் என்பதை உணர்த்திட வேண்டும்.

ஆசிரியர், பெற்றோர்களுக்காக படிக்காமல் மாணவர்கள் தனக்காக படிக்கும் நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அப்போது தான் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும். பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு கூட்டமாக இல்லாமல் ஒவ்வொரு மாணவனின் கற்றலையும், முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு தனித்தனியாக சந்தித்து பேச வேண்டும்.

பல பள்ளிகளில் கழிப்பறை வசதியில்லாமல் மாணவ-மாணவியர் சிரமப்படுகின்றனர். இவையும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு காரணமே. தூய்மையான கழிப்பறை வசதி ஏற்பாடு செய்து, துப்புறவு பணியாளர்களை அவசியம் பணியமர்த்திட வேண்டும். தரமான கல்வியை வழங்கும்போது மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.

ஆக, சமச்சீர் கல்வியை தரமானதாக வழங்கிட வேண்டும். Matric, CBSE-க்கு இணையான பாடத்திட்டம், ஆகியவற்றை ஏற்படுத்தி கற்பித்தாலே அரசு பள்ளிகளிலும் அட்மிசனுக்கு வரிசை நிற்கும். மாணவர்களின் அறிவாற்றல் +2 முடித்து பின்னர், NEET, IAS போன்ற தேர்வுகளை எதிர்கொள்ள போதுமானதாக இருக்குமானால் அரசு பள்ளியே போதுமானது.

கற்கும் மாணவர்கள் எங்கு இருந்தாலும் கற்கலாம்; கற்பிக்கும் ஆசிரியரும் சூழலும் அமைந்தால், அரசு பள்ளி மாணவர்களுக்கு வாழ்க்கையில் ஒப்பிட்டு படிக்கும் ஆற்றல் அதிகம். அதை ஆசிரியரே மெருகேற்ற வேண்டும். ஆகவே, அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆசிரியரின் ஒத்துழைப்பும், பங்குமே அதிகமாக இருக்க வேண்டும். அரசும் முழு பங்காற்றிட வேண்டும் என்பதே எனது கருத்து.

தனியார் பள்ளியில் படிப்பதையே செல்வாக்கு மிகுதியாக நினைக்கும் எண்ணமும், அங்கு படித்தால் மட்டுமே மாணவர்களின் எதிர்காலம் மேம்பட்டு இருக்கும் என்ற நிலையை மாற்ற வேண்டும்.

அரசு பணியில் உள்ள அரசு பணியாளர்களின் பிள்ளைகள் தனியாரில் கற்கிறார்கள். அவர்களுடைய பிள்ளைகளை  அரசு பள்ளியில் சேர்க்க அவர்களே முன்வர வேண்டும்.கட்டாயப்படுத்த வேண்டாம் அப்போதுதான் கல்விமுறை அரசு பள்ளியில் மாற்றம் அடையும்; மாணவர்களின் எண்ணிக்கையும் உயரும்.

அரசு  பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் முன்னுரிமை வழங்கிட வேண்டும். சட்ட திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்தினால் மட்டும் போதாது; முறையாக கண்காணிக்க வேண்டும்.





  திருமதி சரண்யா வருங்கால கணினி ஆசிரியர்  (புதுக்கோட்டை).,


தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக