லேபிள்கள்

18.12.17

பாலிடெக்னிக் முறைகேடு: சிக்குவது யார்?

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறை கேட்டில், உதவியாளர் முதல், உயர்மட்ட அதிகாரிகள் வரையிலான விசாரணை துவங்கி உள்ளது. சம்பந்தப் பட்டோர், விரைவில், 'சஸ்பெண்ட்' செய்யப்படலாம்
என, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில், செப்டம்பரில் போட்டி தேர்வு நடத்தப்பட்டது. இதில், 1.33 லட்சம் பேர் பங்கேற்றனர். 

தேர்வு முடிவுகள், நவ.,7ல் வெளியானதும், பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. வெளிமாநில தேர்வர்கள் பலர், இந்த தேர்வில் பணி வாய்ப்பு பெற்றுள்ளதாக புகார் கூறப்பட்டது. தேர்வு  முடிவுக்கான மதிப்பெண்களில் குளறுபடி ஏற்பட்டு உள்ளதாகவும், டி.ஆர்.பி., தலைவர், ஜெகனாதன், உறுப்பினர் செயலர், உமா, பள்ளிக் கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ், உயர் கல்வி முதன்மைசெயலர், சுனில் பாலிவால் ஆகியோருக்கு, தேர்வர்கள் பலர், புகார் மனுக்கள் அனுப்பினர்.இதையடுத்து, ஏற்கனவே வெளியிடப் பட்ட தேர்வு முடிவுகளை, டி.ஆர்.பி., ரத்து செய்து உள்ளது. தேர்வர்களின் விடைத்தாள் நகல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 


அதை, தேர்வர்கள் ஆய்வு செய்ததில், டி.ஆர்.பி., வெளியிட்ட பட்டியலில், உண்மையான மதிப்பெண் மாறி இருப்பது தெரிய வந்துள்ளது.இது குறித்து, பள்ளிக்கல்வி செயலர், உயர்கல்வி செயலர், டி.ஆர்.பி.,யின் தலைவர், தொழில்நுட்ப கல்வி இயக்குனர் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக்குழு, ரகசியவிசாரணையை துவக்கி உள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசாரும் விசாரணையை துவக்கி உள்ளனர்.


மதிப்பெண் மாறியதில் தொடர்புடையோர் யார்; மதிப்பெண்ணை பதிவு செய்த கணினி ஆப்பரேட்டர் கள் யார்; அவர்களுக்கு மதிப்பெண்ணை அதிகரித்து பதிவு செய்ய உத்தரவிட்டது யார்...அமைச்சர்களின் பெயரை சொல்லி, ஏஜென்ட்கள் யாரும் பணம் சுருட்டியுள்ளனரா என, விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. விசாரணையின் முடிவில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' செய்யப்படலாம்.


ஆனால், சஸ்பெண்ட் செய்தால், அவர்களை துாண்டி விட்டவர்களும், பின்னணியில் உள்ள அரசியல்வாதிகளும் சிக்குவர் என்பதால், இருதலைக்கொள்ளி எறும்பாக, டி.ஆர்.பி., மற்றும் பள்ளிக்கல்வி, உயர்கல்வி அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக