பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடந்த, மதிப்பெண் குளறுபடி குறித்து, நாளை முதல் விசாரணை நடத்தப்பட உள்ளது.தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப,ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில் தேர்வு நடத்தப்பட்டது.
செப்டம்பரில் நடந்த தேர்வில், 1.33 லட்சம் பேர் பங்கேற்றனர்; நவ., 7ல், முடிவுகள் வெளியாகின.முடிவுகளில் பல குளறுபடிகள் ஏற்பட்டன. சரியாக விடை எழுதிய பலருக்கு, மதிப்பெண் குறைந்துள்ளது. சரியான பதில் எழுதாதவர்களுக்கு, மதிப்பெண் இரட்டிப்பாகி இருந்தது. இதை அறிந்த தேர்வர்கள், டி.ஆர்.பி.,க்கும், உயர் கல்வித் துறைக்கும் ஆதாரத்துடன் புகார் அனுப்பினர்.இதையடுத்து, தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டன. பின், 1.33 லட்சம் தேர்வர்களின் விடைத்தாள் நகல்களும், விடைக்குறிப்புகளும், இணையதளத்தில் வெளியிடப்
பட்டன. விடைத்தாள் நகலை ஆய்வு செய்து, டிச., 18க்குள், டி.ஆர்.பி.,க்கு கடிதம் அனுப்ப, தேர்வர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, நேற்று வரை, தேர்வர்களிடம் இருந்து கடிதங்கள் பெறப்பட்டுள்ளன. இன்று வரும் கடிதங்களையும், டி.ஆர்.பி.,யில் பெற உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மதிப்பெண்களை பதிவு செய்ததில் குளறுபடி செய்தது யார் என, விசாரணை
துவங்கியுள்ளது. உதவியாளர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை, யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது; மதிப்பெண் வழங்க பணம் கைமாறியதா; அரசியல்வாதிகளில் யாருக்கு பங்கு உள்ளது; ஏஜன்ட்கள் உள்ளனரா என, உயர்மட்ட விசாரணை நடந்து வருகிறது.
இதன் ஒரு கட்டமாக, தேர்வர்களின் கடிதங்களின் அடிப்படையில், சந்தேகத்துக்கு உரிய தேர்வர்களை நேரில் அழைத்து, நாளை முதல் விசாரணை நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. அதிக மதிப்பெண் பெற்ற தேர்வர்கள், யாரை தொடர்பு கொண்டனர்; அவர்களுக்கு, உதவியது யார் என்ற
விபரங்கள், இந்த விசாரணையில் தெரிய வரும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக