லேபிள்கள்

19.1.18

5, 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு: விரைவில் மசோதா: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்

தொடக்கக் கல்வியை மேம்படுத்தும் வகையில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறையை அமல்படுத்துவதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.

'இம்மசோதாவுக்கு இதுவரை 26 மாநிலங்கள் ஒப்புதல் தெரிவித்து விட்டன. ஒருசில மாநிலங்கள் மட்டுமே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. விரைவில் அந்த மாநிலங்களிடமும் ஒப்புதல் பெறப்படும்' என்றும் அவர் கூறினார்.
'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்' சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட இரண்டு நாள் கல்வி மாநாட்டின் இறுதி நாளான வியாழக்கிழமை நிகழ்வில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியது: 
ஒரு நாட்டைப் பாதுகாக்க ராணுவம் எந்த அளவுக்குத் தேவையோ, அதுபோல ஒரு நல்ல பண்பு நிறைந்த சமூகத்தைப் பாதுகாக்க சிறந்த பள்ளிகள் தேவை. இதை உணர்ந்துள்ள மத்திய அரசு தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை மிகப் பெரிய மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. 
பல சிறிய நாடுகளிலும்கூட, ஒன்றாம் வகுப்பு முதல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் குறிப்பாக அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை தேர்வுகள் நடத்தப்படுவதில்லை. மாணவர்களை முறையாக மதிப்பீடு செய்யாமலேயே 9-ஆம் வகுப்புக்கு அனுப்பப்படுகின்றனர். இதனால், மாணவர்கள் பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. உதாரணத்துக்கு, 7-ஆம் வகுப்பு மாணவருக்கு, 4-ஆம் வகுப்பு கணிதத்தைப் போடத் தெரிவதில்லை. இதை மாற்றி, முறையான, தரமான தொடக்கக் கல்வியை குழந்தைகளுக்கு வழங்கும் நோக்கத்தோடு 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறை (போர்டு எக்ஸாம்) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான சட்ட மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
இதன்படி, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு மார்ச் மாதம் நடத்தப்படும் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, மே மாத துணைப் பொதுத் தேர்வில் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். இந்த இரண்டாவது வாய்ப்பிலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள், அடுத்த வகுப்புக்கு அனுப்பப்பட மாட்டார்கள். இந்தச் சட்ட மசோதாவுக்கு இதுவரை 26 மாநிலங்கள் ஒப்புதல் தெரிவித்துவிட்டன. எதிர்ப்புத் தெரிவித்து வரும் ஒரு சில மாநிலங்களிடமும் விரைவில் ஒப்புதல் பெறப்பட்டுவிடும்.
ஆசிரியர்கள் பணி நீக்கம்: தொடக்கக் கல்வி ஆசிரியர்களையும் உரிய தகுதியுடையவர்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்போது நாடு முழுவதும் தொடக்கப் பள்ளிகளில் முறையான பயிற்சி இல்லாமல் 20 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரையும் தகுதியான ஆசிரியர்களாக மாற்றுவதற்காக, ஆசிரியர் பட்டயத் தேர்வில் தேர்ச்சி பெறுவதை மத்திய அரசு கட்டாயமாக்கியது. இதுவரை இவர்களில் 5 லட்சம் ஆசிரியர்கள் மட்டுமே இந்தப் பட்டயத் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர்.
இந்த ஆசிரியர்களின் வசதிக்காக 'ஸ்வயம்' என்ற வலைதளத்தில் ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கான அனைத்துப் பாடங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எனவே, எஞ்சியுள்ள 15 லட்சம் ஆசிரியர்களும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பட்டயத் தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும். இல்லையெனில், பணியிலிருந்து அவர்கள் நீக்கப்படுவர்.
பள்ளிக் கல்வியைப் போல, உயர் கல்வியையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உலகத் தரத்திலான உயர் கல்வி நிறுவனங்களை உருவாக்கும் வகையில், மேம்பட்ட உயர் கல்வி நிறுவனம் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 20 உயர் கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கு தலா ரூ. 1000 கோடி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு வழங்க உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 103 உயர் கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. 
அதுபோல, அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகளை தன்னாட்சி அதிகாரம் கொண்ட கல்வி நிறுவனங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சிலிடம் (நாக்) குறைந்தபட்சம் 3.26 தரப் புள்ளிகளைப் பெற்ற அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் முழு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட உள்ளது.
ஐஐஎம்-க்கு முழு தன்னாட்சி அதிகாரம்: நாடு முழுவதும் இயங்கி வரும் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களுக்கு (ஐஐஎம்) முதன் முறையாக முழு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட உள்ளது. வரும் 31-ஆம் தேதி இதற்கான சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்றார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
'நவோதயா பள்ளிகள் இல்லாதது துரதிர்ஷ்டம்' 
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய அமைச்சர் ஜாவடேகர் பேசினார்.
சென்னையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் வியாழக்கிழமை நடந்த கல்விக் கருத்தரங்கில் அவர் பேசியது:
தரமான உயர்கல்வி நிறுவனங்களில் மேலும் அதிக மாணவர்கள் சேர்க்கை பெற வசதியாக, புதிதாக 7 ஐஐஎம்கள், 7 ஐஐடி கல்வி நிறுவனங்களும் உருவாக்கப்பட உள்ளன. நாடு முழுவதும் 100 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், 17 நவோதயா பள்ளிகளும் புதிதாக உருவாக்கப்பட உள்ளன. சிறந்த பள்ளிக் கல்வியை வழங்கி வரும் நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் இல்லாதது துரதிஷ்டவசமானது.
மீண்டும் ரூசா திட்டம்: தரமான அனைவருக்குமான உயர் கல்வியை உறுதிப்படுத்தும் வகையில், அனைவருக்கும் உயர் கல்வி (ரூசா) என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஆனால், பல உயர் கல்வி நிறுவனங்கள் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல், இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெறத் தவறிவிட்டன. 
இந்த உயர் கல்வி நிறுவனங்களும் பயன்பெறும் வகையில், பல்வேறு புதிய அம்சங்களுடன் மாற்றியமைக்கப்பட்ட 'ரூசா' திட்டம் வரும் 2020-இல் மீண்டும் அறிமுகம் செய்யப்படும். 
இதை உயர் கல்வி நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் உயர் கல்வி நிறுவனத்துக்கு ரூ. 40 கோடி வரை மேம்பாட்டு நிதியை மத்திய அரசு வழங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக