லேபிள்கள்

27.5.18

பள்ளி கல்வித்துறை புது உத்தரவு இனி ஸ்மார்ட் போன் இல்லைன்னா நடவடிக்கை: புதிய பாடத்திட்டத்தால் எல்லாம் தலைகீழ்

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, மாணவர்களின் மனநிலைக்கு ஏற்ப, கற்றல், கற்பித்தல் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. முப்பரிமாண படங்கள், செல்போனில் ஸ்கேன் செய்து, அதுதொடர்பான கூடுதல் தகவல்களை பெறும் கியூஆர் குறியீட்டு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு ஆசிரியரும் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. கடந்த ஆண்டுகளில், பள்ளிகளில் வேலை நேரங்களில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. ஆனால், இனி புதிய பாடத்திட்டத்தின்கீழ் ஒவ்வொரு அரசு பள்ளி ஆசிரியரும் கட்டாயம் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மீறினால், மெமோ வழங்கப்பட்டு, சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த காலத்தில் பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தியதற்காக மெமோ வழங்கப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 

மாநிலம் முழுவதும் பல ஆயிரம் ஆசிரியர்களுக்கு மெமோ வழங்கப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. ஆனால், தற்போது புதிய பாடத்திட்டத்தின்கீழ், இந்த நடவடிக்கை தலைகீழாக மாறிவிட்டது. கட்டாயம் ஸ்மார்ட்போன் கொண்டுவர வேண்டும் என்ற சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பள்ளி கல்வித்துறை உயரதிகாரிகள் கூறியதாவது: காலச்சூழலுக்கு ஏற்ப மாற்றம் அவசியமாகிறது. தொழில்நுட்ப பயன்பாடு காரணமாக இனி அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகிறது. ஸ்மார்ட்போன் கொண்டுவராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. 1, 6, 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தில் புத்தகத்தில் உள்ள தகவல்கள் அல்லாமல் இணையதளத்தில் உள்ள தகவல்களையும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வசதியாக QR CODE (விரைவு குறியீடு) இருக்கும். ஸ்மார்ட் போன் மூலம் QR கோடு ஸ்கேன் செய்தால் இணையத்தில் இருந்து கூடுதல் தகவல்களை பெற்று செல்போன், லேப்டாப் அல்லது ஸ்மார்ட் கிளாஸ் மூலம் மாணவர்களுக்கு விளக்கி கூற வேண்டும். இந்த வசதியை பெற, ஒவ்வொரு ஆசிரியரும் பள்ளிக்கு வரும்போது ஸ்மார்ட் போன் கொண்டு வரவேண்டும். வரும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கும் நாளில் ஸ்மார்ட் போன் கொண்டுவராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக