சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் போல, தமிழக பள்ளி கல்வியிலும், 40 ஆண்டுகளில் இல்லாத வகையில், 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில், பிளஸ் 1, பிளஸ் 2 தவிர, 10 வகுப்புக்கும், தொழிற்கல்வி, விருப்ப பாடமாக நடத்தப்படுகிறது.
ஒப்புதல்
இதை பின்பற்றி, தமிழ கத்திலும், இடைநிலை கல்வியில் முதன்முதலாக, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வி இயக்குனரும், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ.,வின் முன்னாள் இயக்குனருமான, ராமேஸ்வர முருகன், இந்த திட்டத்துக்கான கோப்பை தயாரித்து, மாநில அரசிடம் தாக்கல் செய்திருந்தார். அதற்கு ஒப்புதல் கிடைத்து உள்ளது.
இதன்படி, நடப்பு கல்வி ஆண்டில், முதற்கட்டமாக, 67 பள்ளிகளில், 9ம்வகுப்பிற்கு மட்டும், தொழிற்கல்வி பாடம் நடத்தப்பட உள்ளது. இதற்கு, பள்ளி அளவிலான தேர்வாக அல்லாமல், அரசின் பொது தேர்வுத்துறை வழியாக, தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கு பின், தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் வாயிலாக சான்றிதழ் வழங்கப்படும்.
இதுகுறித்து, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்கள் கூட்டமைப்பின், மாநில அமைப்பாளர் ஜனார்த்தனன் கூறியதாவது:தமிழகத்தில், 1978 - 79ல், தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டு, அவை, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு அமலுக்கு வந்தன.
வேலை வாய்ப்பு
ஆனால், இடைநிலைமாணவர்களுக்கும், தொழிற்கல்வி துவங்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது. அதை நிறைவு செய்யும் வகையில், 9ம் வகுப்பில், தொழிற்கல்வி பாடம் அமலுக்கு வந்துள்ளது.இதில், தானியங்கி ஊர்தி பொறியியல், வீட்டு அலங்காரம் செய்தல், விவசாயம், அழகு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இந்த நடவடிக்கையால், உயர்கல்விக்கு செல்லாமல், பள்ளிப்படிப்பை மட்டும் முடிக்கும் மாணவர்களுக்கும், தொழில் திறனும், வேலை வாய்ப்பும் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார். மத்திய திட்டத்தை பின்பற்ற உத்தரவுதொழிற்கல்வி பாடத்தை, சி.பி.எஸ்.இ.,யை போல, தமிழக மாணவர்களுக்கு, விருப்ப பாடமாக நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., பின்பற்றும், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யின் பாடத்திட்டப்படி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த மத்திய பாடத்திட்டத்தில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம், தேவையான திருத்தங்கள் மேற்கொள்ள அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக