லேபிள்கள்

5.8.18

கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 27-ந் தேதி முதல் வேலைநிறுத்தம் ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க அலுவலக கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் ஜாக்டோ -ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மு.சுப்பிரமணியன்(தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்), இரா.தாஸ்(தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி), கு.வெங்கடேசன்(தலைமைச்செயலகம்), நிதி காப்பாளர் ச.மோசஸ் (தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி), செய்தி தொடர்பாளர் கு.தியாகராஜன்(தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்) மற்றும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் உள்ள 114 சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கு பெற்றனர்.

கூட்டம் முடிந்ததும், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மு.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கண்ணியமற்ற முறையில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இதை கண்டித்து வருகிற 9-ந் தேதி (வியாழக்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பல போராட்டங்கள் நடத்தியும் அரசு நிறைவேற்றி தரவில்லை.

குறிப்பாக புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 21 மாத நிலுவைத்தொகை வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் மாதம் 27-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறோம்.

அதற்கு முன்னதாக வருகிற 13.10.2018 அன்று சேலத்தில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்த உள்ளோம். அரசு எங்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றி தீர்வு காண வேண்டும்.

வேலைநிறுத்தத்துக்கு முன்னதாக 19.11.2018 முதல் 23.11.2018 வரை கோரிக்கைகள் தொடர்பாக தீவிர பிரசாரம் செய்ய இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக