லேபிள்கள்

5.8.18

அண்ணா பல்கலை விவகாரம் : மதிப்பெண் பட்டியலிலும் மோசடி

அண்ணா பல்கலை விவகாரத்தில், மதிப்பெண் பட்டியல் அச்சிடுவதிலும் மோசடி
நடந்துள்ளதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளுக்கு, 2017 ஏப்ரல், மே மாதங்களில் நடந்த தேர்வில், விடைத்தாள் மறுமதிப்பீடுக்காக, 3.02 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களில், 73 ஆயிரத்து, 733 பேர், மறுமதிப்பீட்டின் வாயிலாக தேர்ச்சி பெற்றனர். அதிலும், 16 ஆயிரத்து, 636 பேர், அதிக மதிப்பெண் பெற்றனர். இவர்களில் பலர், ஏற்கனவே தோல்வி அடைந்த, 10 பாடங்கள் வரை தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பிரச்னை குறித்து, மாணவர்கள் தரப்பில், உயர் கல்வித்துறைக்கு மனுக்கள் அனுப்பியும், நடவடிக்கை எடுக்கப்படாததால், லஞ்ச ஒழிப்பு துறைக்கு, ஆதாரங்களுடன் கடிதம் அனுப்பினர். 
லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில்,மாணவர்கள் தேர்ச்சி பெற, தலா, 10 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது தெரிய வந்தது. இதில் சம்பந்தப்பட்ட, அண்ணா பல்கலை முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். திண்டிவனம் கல்லுாரியின் முன்னாள் தேர்வு மைய ஒருங்கிணைப்பாளரும், கல்லுாரி முதல்வர் பொறுப்பில் இருந்தவருமான உதவி பேராசிரியர் விஜயகுமார்; தேர்வு மையத்தின் மற்றொரு முன்னாள் அதிகாரியான, திண்டிவனம் கல்லுாரி உதவி பேராசிரியர் சிவகுமார் ஆகியோர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். இந்த மூவர் மீது மட்டுமின்றி, மேலும், ஏழு பேர் மீதும், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன், இந்த மோசடியில் தொடர்புடைய, இடைத்தரகர்கள் மற்றும் கல்வித் துறை உயரதிகாரிகள் குறித்தும், விசாரிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கூறியதாவது: அண்ணா பல்கலை விவகாரத்தில், மேலும், சில அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக, விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனடிப்படையில், தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. அந்த அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதை நிரூபிக்க, ஆவணங்கள் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. விரைவில், அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும். விடைத்தாள் மறுமதிப்பீட்டில் நடந்த மோசடி போல, கூடுதல் மதிப்பெண் பட்டியல் அச்சிட்டும், 60 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது. இதுகுறித்த விசாரணையும் தொடர்ந்து நடைபெறுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக