தமிழக அரசு பள்ளிகளில், உடற்கல்வி, ஓவியம், தையல் மற்றும் இசை போன்ற பாடப்பிரிவுகளுக்கு, 1,325 சிறப்பாசிரியர்களை தேர்வு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வாயிலாக, 2017 செப்., 23ல், போட்டி தேர்வு நடத்தப்பட்டது.
இதில், 36 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு, 10 மாதங்களுக்கு பின், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, நாளை சான்றிதழ் சரிபார்ப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் பலர், இரண்டு வகையான தொழிலாசிரியர் பயிற்சி சான்றிதழ் வைத்திருப்பதால், திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, தேர்வு எழுதியவர்கள், தமிழ்நாடு கலை ஆசிரியர் நல சங்க தலைவர் ராஜ்குமார் தலைமையில், பள்ளிக் கல்வி செயலர், பிரதீப் யாதவ் மற்றும் டி.ஆர்.பி., அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து, கலை ஆசிரியர் நல சங்க தலைவர், ராஜ்குமார் கூறியதாவது:
தொழில்நுட்ப தேர்வு என்பது, பள்ளி கல்வியின் தேர்வு துறையால் நடத்தப்படுகிறது. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 'தொழிலாசிரியர் சான்றிதழ்' என்ற பெயரில் சான்றிதழ் தரப்படுகிறது. இவர்களையே, சிறப்பாசிரியர்களாக பள்ளி கல்வித்துறை நியமித்து வருகிறது.இந்நிலையில், தொழிலாசிரியர் தேர்வு முடித்தவர்களுக்கு, வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், 1994 முதல் தேர்வு நிறுத்தப்பட்டு, 2002க்கு பின், மீண்டும் நடத்தப்படுகிறது.
தேர்வை அரசு நிறுத்தியிருந்த காலத்தில், தமிழக வேலைவாய்ப்பு துறை சார்பில், தனியார் நிறுவனங்கள் வாயிலாக, தொழிலாசிரியர் பயிற்சி தரப்பட்டுள்ளது. அவர்களுக்கு, பள்ளி கல்வித்துறை பெயரிலேயே சான்றிதழ் அளித்துள்ளனர்.அதனால், தற்போது இரண்டு தரப்பினரும் சான்றிதழ் வைத்திருப்பதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை நடத்தும் தொழிலாசிரியர் தேர்வுக்கு மட்டுமே, விதிகள் ஏற்படுத்தி, நேரடியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு துறையின் படிப்பை, தனியார் நிறுவனங்கள் நடத்தியுள்ளன.
எனவே, பள்ளி கல்வித்துறை தேர்வுக்கு மட்டுமே, இந்த நியமனத்தை மேற்கொள்ள வேண்டும். அரசாணையே இல்லாத படிப்புகளுக்கு, வேலைவாய்ப்பு அளிப்பதால், முறைப்படி படித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பு கிடைக்காத அபாயம் ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக