லேபிள்கள்

15.8.18

ஒரு லட்சம் இடங்களுக்கு மேல் காலி : இன்ஜினியரிங் கல்லூரிகள் கடும் பீதி

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மாணவர் சேர்க்கை கடுமையாக சரிந்துள்ளது. கவுன்சிலிங் முடிவில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகும் என்பதால்,
கல்லுாரிகள் பீதி அடைந்துள்ளன. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, முதலில், தொழிற்கல்வி, விளையாட்டு பிரிவு மற்றும் மாற்று திறனாளி மாணவர்களுக்கு, ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங் நடந்தது. இதில், 1,755 இடங்கள் நிரம்பின. இந்த ஒதுக்கீட்டில் காலியான இடங்கள், பொது பாட பிரிவுக்கான கவுன்சிலிங்கில் சேர்க்கப்பட்டன.பொது பிரிவினருக்கான கவுன்சிலிங், இந்த ஆண்டு, 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டது. இதன்படி, ஐந்து சுற்றுகளாக கவுன்சிலிங் பிரிக்கப்பட்டு, இதுவரை, நான்கு சுற்றுகளுக்கு முடிந்துள்ளது. பொது பிரிவில் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்த, 1.02 லட்சம் பேரில், 78 ஆயிரத்து, 169 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. நான்கு சுற்றுகளில், 78 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். ஐந்தாம் சுற்றுக்கு, 24 ஆயிரத்து, 683 பேர் மட்டும் மீதமுள்ளனர். மொத்தம், 509 கல்லுாரிகளில், 1.70 லட்சம் இடங்களுக்கு, இதுவரை நடந்த நான்கு சுற்றுகளில், 51 ஆயிரத்து, 990 பேர் மட்டும், இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர். இன்னும், 1.18 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன.ஐந்தாம் சுற்றில், 15 ஆயிரம் இடங்கள் நிரம்பினாலும், மொத்த மாணவர் சேர்க்கை, 67 ஆயிரமாகவே இருக்கும். எனவே, ஐந்தாம் சுற்று முடிவில், காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்திற்கு மேல் இருக்கும்.ஏழு ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டு, 1.03 லட்சம் வரை காலியிடங்கள் ஏற்படலாம் என, கணக்கிடப்பட்டுள்ளது. கல்லுாரிகளை எப்படி நடத்துவது, ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது எப்படி; பராமரிப்பு செலவை சமாளிப்பது எப்படி என, இன்ஜி., கல்லுாரிகள் அச்சம் அடைந்துள்ளன.
ஒரு இடம் கூட நிரம்பலை! : நான்கு சுற்று கவுன்சிலிங்கில், விளையாட்டு பிரிவு - 367, முன்னாள் ராணுவ வீரர்கள் - 93, தொழிற்கல்வி - 1,295, பொது பாடப்பிரிவு - 51 ஆயிரத்து, 990 இடங்கள் நிரம்பியுள்ளன. ஐந்தாம் சுற்றில், 15 ஆயிரம் இடங்கள் நிரம்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, 1.03 லட்சம் இடங்கள் காலியாகும் என, கணிக்கப்பட்டுள்ளது.இதுவரை, 36 கல்லுாரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை; 18 கல்லுாரிகளில் தலா ஒரு மாணவர் மட்டுமே சேர்ந்துள்ளனர்; 83 கல்லுாரிகளில், ஐந்து இடங்கள்; 120 கல்லுாரிகளில், 10 இடங்கள்; 299 கல்லுாரிகளில், 50க்கும் குறைவான இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன; 81 கல்லுாரிகளில் மட்டுமே, 50 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.
சரிவை சமாளிப்பது எப்படி? : இன்ஜி., கவுன்சிலிங்கின் நிலை குறித்து, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது: ஒரு காலத்தில் இன்ஜி., படிப்பில், அதிகபட்ச சேர்க்கை உடைய தமிழகம், தற்போது, பின்னடைவை சந்தித்துள்ளது. தற்போதைய நிலையில், 300 கல்லுாரிகளில், 50 சதவீதத்துக்கு குறைவான இடங்களே நிரம்பியுள்ளன. இதனால், 250 கல்லுாரிகளை இனி நடத்த முடியாத அபாயம் ஏற்பட்டுள்ளது. 'கெமிக்கல் இன்ஜினியரிங், மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ், பயோ மெடிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ருமென்டேஷன்' போன்ற படிப்புகளுக்கு, மாணவர்களிடம் மவுசு இல்லை. மெக்கானிக்கல், சிவில் பாடங்களிலும், மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது. முன்னணி தரவரிசையில் உள்ள, 100 கல்லுாரிகளில் மட்டுமே, அதிக இடங்கள் நிரம்பியுள்ளன. இதற்கு தீர்வு காண, அண்ணா பல்கலையும், தமிழக அரசும் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். தேர்வு முறை மற்றும் பாடத்திட்டத்தில் பெரிய அளவில் மாற்றம் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக