லேபிள்கள்

8.4.13


தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 12 புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 12 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டப் பேரவையில் விதியெண் 110யின் கீழ், அறிக்கை ஒன்றை வாசித்தபோது, அவர் இதனை தெரிவித்தார்.

2013-2014 ஆம் கல்வி ஆண்டில் இருந்தது புதிதாக 8 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை சுட்டிக் காட்டிய ஜெயலலிதா, அதோடு சேர்த்து மேலும் 4 கல்லூரிகள் தொடங்கப்படும் என இன்று அறிவித்தார்.

சிவகாசி, கோவில்பட்டி, கடலாடி, முதுகுளத்தூர், திருவாடானை, கரம்பக்குடி, ஓசூர், குமாரபாளையம், காங்கேயம், உத்திரமேரூர், பேராவூரணி ஆகிய 11 இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் தொடங்கப்படும் என ஜெயலலிதா கூறினார்.

தமிழகத்தின் மையப் பகுதியாக விளங்கும் திருச்சி மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி இல்லாததைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீரங்கத்தில் அரசு பொறியியல் கல்லூரி இந்த ஆண்டு முதல் தொடங்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழுள்ள நான்கு மண்டல மையங்கள் மற்றும் உறுப்பு பொறியியல் கல்லூரிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த , 150 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக