லேபிள்கள்

8.4.13


அரசு பள்ளியில் "செஸ்' விளையாட்டு : தயார் நிலையில் சதுரங்க பலகைகள்

தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில், சதுரங்கம் (செஸ்) பலகைகள் விரைவில் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. தமிழக அரசு மற்றும் உதவி பெறும் துவக்க, நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியரின் அறிவுத்திறன், சிந்தனைத்திறன் தூண்டும் வகையில் மாணவர்களுக்கு "செஸ்' விளையாட்டு கற்றுத்தர முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக, "செஸ்' போர்டுகள் வாங்க, தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி, 2012-13ம் கல்வியாண்டுக்கு தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும், 7 முதல், 17 வயது வரையுள்ள மாணவ, மாணவியருக்கு சதுரங்க (செஸ்) விளையாட்டுக்கான பலகைகள் வழங்குவதற்கு, 39.47 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. "செஸ்' விளையாட்டு திட்டத்தை செயல்படுத்த கொள்முதல் குழு ஏற்படுத்தி ஆணை வெளியிடப்பட்டது. கொள்முதல் குழு தலைவராக, மாவட்ட கல்வி அலுவலரும், உறுப்பினர் செயலராக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரும், உறுப்பினர்களாக முதன்மை கல்வி அலுவலர் (எஸ்.எஸ்.ஏ.,) உடற்கல்வி இயக்குனர் நிலை-1 (மேல்நிலைப்பள்ளி), தலைமையிட மாவட்ட கல்வி அலுவலர், மண்டல உடற்கல்வி அலுவலர், மண்டல உடற்கல்வி ஆய்வாளர், தலைமையிட உதவி தொடக்கக்கல்வி அலுவலர், தலைமையிட பஞ்., யூனியன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், தலைமையிட பஞ்., யூனியன் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு இந்த, "செஸ்' போர்டுகள் விரைவில் வழங்கப்பட உள்ளன. முதல் கட்டமாக, திருச்சி மாவட்டத்தில் உள்ள, 1,300க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு, வழங்குவதற்காக, 1,342 "செஸ்' போர்டுகள் கடந்த வாரம் வாங்கப்பட்டுள்ளன. இவை விரைவில் பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட உள்ளன.

"செஸ்' போர்டுகளுக்கு முகப்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போட்டோ இடம் பெற்றுள்ளது. பள்ளி மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு வழங்கும், 14 வகையான நலத்திட்ட உதவிகள் குறித்த, "சக்கரம்' இடம் பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக