லேபிள்கள்

10.4.13


அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் கணக்கிடுவதில் பாரபட்சம் கூடாது - உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு


9.8.1989 அன்று தமிழக அரசு ஓர் அரசாணையை வெளியிட்டது. 1.6.1988 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பணியிலிருந்து ஓய்வுபெறும் அரசு ஊழியர்களின் அகவிலைப் படியில் அதிகபட்சம் 13 % மட்டுமே ஓய்வூதியம் கணக்கிட எடுத்துக் கொள்ளப்படும் என்று அரசாணையில் கூறப்பட்டிருந்தது. எனினும் 1.1.1996ஆம் தேதியிலிருந்து ஓய்வு பெறுவோருக்கு இந்த ஓய்வூதியக் கணக்கீட்டு முறையில் மாற்றம் செய்யப்பட்டது. 

அரசின் இந்த நடவடிக்கை காரணமாக 1.6.1988 முதல் 31.12.1995 வரை பணியிலிருந்து ஓய்வு பெற்ற தமிழக அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக கள்ளக்குறிச்சி வட்டார ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் சங்கம் உள்பட ஏராளமான ஓய்வூதியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஓய்வூதியர்களுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தாலும், அந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு ரத்து செய்தது. இதனை எதிர்த்து ஓய்வூதியர்கள் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வெவ்வேறு காலகட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு வெவ்வேறு ஓய்வூதியக் கணக்கீட்டு முறையைப் பின்பற்றி ஓர் அரசு பாரபட்சம் காட்டக் கூடாது என்று அந்தத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இது தொடர்பான 9.8.1989ஆம் தேதியிட்ட அரசாணை செல்லாது என்று கூறி அதனை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், பாரபட்சமற்ற, ஒரேவிதமான ஓய்வூதியக் கணக்கீட்டு முறையை அரசு பின்பற்றுமாறு தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மூலம் 1.6.1988-ம் தேதிக்கும் 31.12.1995-ம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஓய்வுபெற்ற ஆயிரக்கணக்கான ஓய்வூதியர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு உரிய உத்தரவைப் பிறப்பிக்கும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் காத்திருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக