லேபிள்கள்

13.11.13

22 ஆண்டுகளாக தொடரும் 1,000 ரூபாய் உதவித்தொகை: கவனிக்கப்படுமா முதல்வர் திட்டம்?

"பள்ளிக் கல்வித் துறையில், கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி, முதல்வர் ஜெயலலிதாவால் அமல்படுத்தப்பட்ட, கல்வி உதவித் தொகை திட்டத்தில், மாற்றம் வேண்டும்' என, கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.


நன்றாக படிக்கும் கிராமப்புற மாணவர்கள், பொருளாதார நெருக்கடி காரணமாக, படிப்பை பாதியில் கைவிடுவதை தவிர்க்க, 1991ல், "ஊரக திறனாய்வு தேர்வு' திட்டத்தை, அப்போது முதல்வராக இருந்த, ஜெயலலிதா அமல்படுத்தினார். இதன்படி, 8ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, இத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வின் மூலம், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஆண்டுக்கு, 50 மாணவியர் மற்றும் 50 மாணவர்கள், தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு, பிளஸ் 2 படிக்கும் வரை, ஆண்டுதோறும், 1,000 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஊரக திறனாய்வு தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவியரது பெற்றோரின் ஆண்டு வருமானம், 12 ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும் என்பது, முதலில் விதிக்கப்பட்ட நிபந்தனை.

தற்போது, இந்த வருமான வரம்பு, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும், கல்வி உதவித் தொகை, 1,000 ரூபாய் என்பதில், மாற்றம் செய்யப்படவில்லை. "தற்போதைய விலைவாசி நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், இந்த கல்வி உதவித் தொகையை உயர்த்த வேண்டும்' என, கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், 1991ல், 8ம் வகுப்பு படித்த மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, 1.5 லட்சத்திற்குள்தான் இருந்தது. தற்போது, எட்டு லட்சத்திற்கும் மேல் உள்ளனர். ஆனாலும், மாவட்டத்திற்கு, 100 பேர் என்ற வீதத்திலேயே, உதவித் தொகைக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதையும் அதிகரிக்க வேண்டும் என்பதும், கல்வியாளர்களின் கோரிக்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக