லேபிள்கள்

13.11.13

கல்வி நிறுவனங்களில் நடக்கும் வன்முறை செயல்களை தடுக்க பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு, பெங்களூரு நிறுவனம் பயிற்சி

சமீப காலமாக, பள்ளி, கல்லூரி வளாகங்களில், மாணவர்கள், வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவது, கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களையே கொலை செய்வது போன்ற, படு பயங்கரமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுத்து நிறுத்தும் வகையில், மாணவர்களை உரிய முறையில் கையாளவும், அவர்களுக்கு, உளவியல் ரீதியான கலந்தாய்வை அளிப்பதற்காகவும், பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு, டிசம்பர் மாதத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பெங்களூரு தேசிய மன நலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (நிம்கன்ஸ்), இந்த பயிற்சியை அளிக்கிறது.


கடந்த ஆண்டு, சென்னை, பாரிமுனையில் உள்ள ஒரு பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு மாணவனால், ஆசிரியை ஒருவர், குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம், தமிழகத்தில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சமீபத்தில், தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் உள்ள, ஒரு பொறியியல் கல்லூரி முதல்வரை, மூன்று மாணவர்கள், கல்லூரி வளாகத்திலேயே, வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவமும், தமிழகத்தை உலுக்கியது. தவறான வழியில் பயணிக்கும் மாணவர்களை ஒழுங்குபடுத்தி, சரியான திசையில் செல்ல நடவடிக்கை எடுத்தாலோ, சரியாக படிக்காதது குறித்து, பெற்றோரிடம் புகார் அளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில், கல்வி நிறுவனங்கள் ஈடுபட்டாலோ, மாணவர்களுக்கு, கோபம் தலைக்கு ஏறி, ஆசிரியர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். மாணவர்களின் இத்தகைய போக்கால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கல்வி வளாகத்தில், தங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும், குரல் கொடுத்து வருகின்றனர். இதுபோன்ற நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்களை, சரியான முறையில் கையாள்வது குறித்தும், அவர்களுக்கு, உளவியல் ரீதியான கலந்தாய்வு அளிக்கவும், தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, முதலில், பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு, பயிற்சியை அளிக்க, ஏற்பாடு செய்துள்ளது.

பெங்களூரு நிறுவனம்:

பெங்களூரு தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (நிம்கன்ஸ்), தமிழக பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு, மனநலம் குறித்த கலந்தாய்வை நடத்துவது குறித்து, பயிற்சியை அளிக்க உள்ளது. இந்த பயிற்சி, அடுத்த மாதம் துவங்குகிறது. இதற்கிடையே, "மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில், மனநல நிபுணர்களை நியமிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும், கவுன்சிலிங் மையங்களை நிறுவ வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி கல்வி இயக்குனரகத்தைச் சேர்ந்த, மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: அனைத்து பள்ளி, கல்லூரி முதல்வர்கள், தாளாளர்கள், செயலர்கள் ஆகியோருக்கு, சமீபத்தில், ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளோம். ஒவ்வொரு கல்வி நிறுவனமும், தங்களது நிறுவனத்தில், மனநல நிபுணராக பணியாற்ற, ஒரு ஆசிரியரை பரிந்துரை செய்ய வேண்டும்; அவர், மாணவர்களுக்கு, மனநல ஆலோசனை வழங்குவதுடன், கவுன்சிலிங் செய்பவராகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். இப்படி, தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, பெங்களூரு, "நிம்கன்ஸ்' மருத்துவமனை, மனநல ஆலோசனை மற்றும் கவுன்சிலிங் அளிப்பது குறித்து, பயிற்சியை அளிக்கும். இதற்கான பயிற்சி மையங்கள், வரும் பிப்ரவரியில் அமைக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

நடமாடும் மையம்:

இதற்கிடையே, மாவட்ட வாரியாக, நடமாடும் மனநல ஆலோசனை மையத்தை அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை சார்பில், 10 மனநல நிபுணர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள், மாவட்ட வாரியாக சென்று, பள்ளி மாணவர்களுக்கு, கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடமாடும் மனநல ஆலோசனை மையம், தற்போது, இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒழுங்கு நடவடிக்கை குழு:


பள்ளி, கல்லூரிகளில், மூத்த ஆசிரியர் தலைமையில், ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக, அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மாணவர்கள், கல்வி நிறுவன வளாகங்களில், ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும்போது, அவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை குழு, உரிய நடவடிக்கையை எடுக்கும். தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக் கழமும், தன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆசிரியர் கல்வி நிறுவனங்களுக்கு, சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. "மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை அளிக்கவும், மாணவர்களை ஒழுங்குபடுத்தும் வகையில், உரிய கவுன்சிலிங்கை அளிக்கவும், ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஆசிரியர் பல்கலைக்கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், "மனநல பயிற்சியில் பங்கேற்க உள்ள ஆசிரியர் விவரங்கள் குறித்து தெரிவிக்க வேண்டும்' எனவும், ஆசிரியர் கல்வி நிறுவனங்களை, பல்கலைக்கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக