'ஓட்டுப்பதிவு காலை, 7:00 மணிக்கே துவங்க உள்ளதால், தேர்தல் அலுவலர்கள் அதிகாலையில், ஓட்டுச்சாவடியில் இருந்தாக வேண்டிய நிலை உள்ளது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் கைக்குழந்தை உள்ள ஆசிரியர்களுக்கு, தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல், ஏப்ரல், 24ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகளை தேர்தல் கமிஷன் தீவிரமாக செய்து வருகிறது. தேர்தல் அலுவலர்களாக, அரசு துவக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரும், கைக்குழந்தை உள்ளவர்களும், கர்ப்பணி ஆசிரியைகளும் இடம்பெற்றுள்ளனர். அறிமுகம் இல்லாத ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய வேண்டும் என்பதற்காக, குடியிருப்புகளில் இருந்து வெகுதொலைவில் உள்ள ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பியுள்ளனர். இதனால், இவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். தேர்தல் பணிகளில் இருந்து கர்ப்பிணி பெண்கள் மற்றும் கைக்குழந்தை உள்ள பெண்களுக்காவது விலக்கு அளிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:
தேர்தல் பணியை பொறுத்தவரை, குறைந்தது, 10 கி.மீ.,தொலைவில் உள்ள இடங்களுக்கே, ஆசிரியர்கள் அனுப்பப்படுகின்றனர். உதாரணமாக சேலத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு, தலைவாசல் அருகில் உள்ள கிராமங்களில் பணி புரிய உத்தரவு போடுகின்றனர். இதனால், குறைந்தது இரண்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகிறது. காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் அறிவுறுத்திஉள்ளது. அனைத்து வேட்பாளர்களின் ஏஜன்டுகளும் வந்து, சரிபார்த்து, ஓட்டுப்பதிவை துவக்கவே, ஒரு மணி நேரத்துக்கும் மேலாகும். இதனால், அதிகாலையிலேயே ஆசிரியர்கள் ஓட்டுச்சாவடியில் இருந்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. மேலும் ஓட்டுப்பதிவு முடிந்து, வீடு திரும்பவும், இரவு, 10:00 மணிக்கு மேலாகிவிடும் நிலை உள்ளது. இதில் பெண் ஆசிரியைகளின் நிலை பரிதாபத்துக்குரியதாக உள்ளது. அதிலும், கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தை உள்ளவர்கள் என, எவ்வித வித்தியாசமும் இல்லாமல், அனைவருக்கும் இதே போன்று, தொலைவில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு 'டூட்டி' போட்டுள்ளனர். இதனால், அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். நீண்ட நேர பயணம், கர்ப்பிணி பெண் மற்றும் கைக்குழந்தை உள்ள ஆசிரியைகளுக்கு, தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளித்துவிட்டு, பெண்களுக்கு குடியிருப்புகளுக்கு அருகிலேயே ஓட்டுச்சாவடி அமைக்க, தேர்தல் கமிஷன் முன் வர வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக