லேபிள்கள்

7.1.15

பாடம் நடத்தாமல் அரட்டை அடித்த ஆசிரியர் 'சஸ்பெண்ட்': கடலூர் சி.இ.ஓ., அதிரடி உத்தரவு

பள்ளிக்கு வந்தும், பாடம் நடத்தாமல் பொழுதை ஓட்டிய பட்டதாரி ஆசிரியரை,'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) உத்தரவிட்டார்.

கடலூர் அடுத்த சாமியார்பேட்டையில், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, வரலாறு பட்டதாரி ஆசிரியராக, நந்தகுமார் என்பவர் வேலை பார்க்கிறார். இவர் தினமும், பள்ளிக்கு வந்தாலும், பாடம் எடுப்பதில்லை என கூறப்படுகிறது. 

இது குறித்து, வகுப்பு மாணவர்கள், கடந்த, 2ம் தேதி, கலெக்டரை சந்தித்து, புகார் தெரிவித்தனர். 'பொதுத்தேர்வு நெருங்கிவிட்ட நிலையில், இன்னும் வரலாறு பாடங்களை, ஆசிரியர் முடிக்கவில்லை. நாங்கள், வரலாறு பாடத்தில் தேர்ச்சி பெறுவோமா என்பது சந்தேகமாக உள்ளது' என, கலெக்டரிடம் தெரிவித்தனர்.மாணவர்களைத் தொடர்ந்து, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும், கலெக்டரை சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து, கலெக்டர், சுரேஷ் குமாரின் உத்தரவின்படி, முதன்மைக் கல்வி அலுவலர், பாலமுரளி, சாமியார்பேட்டை பள்ளியில் விசாரணை நடத்தினார். அதில், மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர்கழக நிர்வாகிகள் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை என தெரிய வந்தது. இதனால், ஆசிரியர், நந்தகுமாரை, 'சஸ்பெண்ட்' செய்து, நேற்று, சி.இ.ஓ., உத்தரவிட்டார்.நந்தகுமார், ஏற்கனவே நெல்லிக்குப்பம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றியபோது, இதே குற்றச்சாட்டின் பேரில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

'ஆசிரியர் செய்தது துரோகம்':

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலர், சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது: ஆசிரியர்களுக்கு, மதிப்பிற்குரிய ஊதியத்தைஅரசு வழங்கி வருகிறது. ஏழை, எளிய பெற்றோர், தங்களது பிள்ளைகளை, அரசு பள்ளிகளுக்கு, ஆசிரியர்களை நம்பி அனுப்பி வைக்கின்றனர். பெற்றோரின் நம்பிக்கைக்கு எதிராக, மாணவர்களுக்கு துரோகம் செய்யும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தேவையான ஒன்று தான். மற்ற ஆசிரியர்களுக்கும் இது பாடமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக