லேபிள்கள்

20.2.15

புதிய வழிகாட்டுதல்: கேள்வி-பதில் வடிவில் என்.சி.டி.இ. விளக்கம்

கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் புதிய வழிகாட்டுதல் குறித்து கேள்வி, பதில் வடிவில் விளக்கங்களை தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்.சி.டி.இ.) வெளியிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ஆசிரியர் கல்வி நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டுதலை (என்.சி.டி.இ. வழிகாட்டுதல் 2014) என்.சி.டி.இ. அண்மையில் வெளியிட்டு, நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. இந்த புதிய வழிகாட்டுதலில் இடம்பெற்றுள்ள சில நடைமுறைகள் குறித்து தமிழகம் உள்பட பல்வேறு மாநில ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்கள் சந்தேகங்களையும், ஆட்சேபனைகளையும் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் சந்தேகங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் கேள்வி, பதில் வடிவில் விளக்கத்தை என்.சி.டி.இ. வெளியிட்டுள்ளது.

இதில் பி.எட். சேர்க்கையைப் பொருத்தவரை, இளநிலை பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும்.

பிரதான பாடத்தில் 50 சதவீதத்துக்கு குறைவாக மதிப்பெண் பெற்றும், ஹானர்ஸ் பாடங்களில் 50 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றிருப்பவர்களை பி.எட். படிப்பில் சேர்க்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை எண்ணிக்கையைப் பொருத்தவரை, ஒரு ஆசிரியர் கல்வியியல் கல்லூரிக்கு அதிகபட்சம் இரண்டு யூனிட் சேர்க்கை (ஒரு யூனிட் என்பது 50 மாணவர்கள்) மட்டுமே அனுமதிக்கப்படும். இரண்டு ஆண்டுகளில் இது 200-ஆக உயர்ந்துவிடும். அதன் பிறகு, உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை அதிகபட்சம் 300-ஆக உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கப்படும். ஏற்கெனவே 100 மாணவர்களுடன் இயங்கி வரும் கல்வி நிறுவனங்கள், வருகிற அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் மட்டுமே வருகிற 2015-16 கல்வியாண்டில் 100 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படும்.

புதிய ஆசிரியர் கல்வியியல் கல்லூரி தொடங்க சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதி கிடைத்த பிறகே, அதற்கான விண்ணப்பத்தை என்.சி.டி.இ.-யிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விளக்கங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக