லேபிள்கள்

1.7.15

பத்தாம் வகுப்பில் 489 மதிப்பெண் பெற்ற மாணவியை பிளஸ் 1-ல் சேர்க்க மறுத்தது ஏன்?- உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 489 மதிப்பெண் பெற்ற மாணவியை பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதில் அளிக்குமாறு கல்வித் துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.மதுரை புதூரைச் சேர்ந்த ஏ.கதிரேசன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல்செய்த மேல்முறையீடு மனு:

என் மகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 489 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால் அவரை அதே பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க மறுத்துவிட்டனர். இதனால் என் மகளை பிளஸ் 1-ல் சேர்க்க உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தேன். அந்த மனுவை தள்ளுபடி செய்து தனி நீதிபதி 26.6.2015-ல்உத்தரவிட்டார்.பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை அதே பள்ளியில் பிளஸ் 1-ல் சேர்க்க வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமை. பிளஸ்-1 வகுப்பில் மாணவர்கள் புதிதாக சேர்க்கப்படுவதில்லை. மறு சேர்க்கை நடைபெறுகிறது. இறுதிதேர்வு எழுதும் வரை மாணவர், அதே பள்ளி மாணவர் தான்.நான் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக இணைச் செயலராக உள்ளேன். இதனால் என் மீதான ஆத்திரம் காரணமாக என் மகளை சேர்க்க மறுக்கின்றனர்.

பெற்றோர்கள் மீதான கோபத்துக்கு மாணவர்களை பழிவாங்கக்கூடாது. எனவே, தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து, என் மகளை பிளஸ் 1-ல் சேர்க்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார். மனுவுக்குப் பதில் அளிக்க மதுரை மாவட்டக் கல்வி அதிகாரி, மாவட்ட மெட்ரிக். பள்ளிகள் ஆய்வாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பநீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக