லேபிள்கள்

2.7.15

ஆசிரியர்களின் வருகை கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிப்பு - திண்டுக்கல் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அதிரடி

ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை கல்வித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்ட  தொடக்கக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 1,422 பள்ளிக்கூடங்கள் உள்ளன. இதில், 861 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளும், 200 நடுநிலைப்பள்ளிகளும் அடங்கும்.

இதைத்தவிர 253 உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளும், 23 நகராட்சி பள்ளிகளும், புதிதாக தொடங்கப்பட்ட 5 அரசு தொடக்கப்பள்ளிகளும், 50 கள்ளர் பள்ளிகளும், 16 ஆதிதிராவிடர் பள்ளிகளும், 14 சுய நிதி பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.

இந்த பள்ளிக்கூடங்களில் 1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரை செயல்வழி கற்றல் முறையிலும், 6–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை படைப்பாற்றல் முறையிலும் கல்வி கற்பிக்கப்படுகிறது.
கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் சில ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் பள்ளிகளுக்கு சரிவர வருவதில்லை என்ற புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து பள்ளிகளுக்கு தினமும் காலை, மாலை வேளைகளில் கல்வித்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று கண்காணித்து வருகின்றனர்.

மேலும் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கிற நேரம், முடிவடையும் நேரம் குறித்து ஆய்வு செய்கிறார்கள். பள்ளிக்கு வருகை தராத ஆசிரியர்கள் குறித்து ரகசிய விசாரணை நடத்தப்படுகிறது. செயல்வழிக்கற்றல், படைப்பாற்றல் கல்வி ஆகியவை முறையாக கற்பிக்கப்படுகிறதா? என்று மாணவ–மாணவிகளிடம் கேட்டறிகின்றனர். 2 ஆசிரியர்களிடம் விளக்கம் 2 ஆசிரியர்கள் மட்டும் பணிபுரிகிற சில பள்ளிக்கூடத்தில், ஒருநாள் விட்டு ஒரு நாள் ஆசிரியர்கள் வந்து செல்வதாக கூறப்படுகிறது. இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபடுகிற ஆசிரியர்களை கையும், களவுமாக பிடிக்கும் முயற்சியில் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு பள்ளியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பாண்டியராஜன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பள்ளிக்கு ஆசிரியர் ஒருவர் வரவில்லை. ஆனால் விடுப்பு எடுத்ததற்கான கடிதத்தையும் அவர் கொடுக்கவில்லை.
இது தொடர்பாக மாணவ–மாணவிகளிடம் தொடக்கக்கல்வி அலுவலர் பாண்டியராஜன் விசாரணை நடத்தினார். அப்போது அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், அடிக்கடி பள்ளிக்கு வராமல் இருப்பது தெரியவந்தது. இதில் என்ன கொடுமை என்றால், தங்களுக்கு பாடம் கற்பித்து கொடுக்கிற ஆசிரியரின் பெயரே அந்த மாணவ–மாணவிகளுக்கு தெரியவில்லை.


இதேபோல் மற்றொரு பள்ளியில் ஆய்வு செய்தபோது, சரியாக பள்ளிக்கு வராத இன்னொரு ஆசிரியரும் சிக்கினார். முறைகேட்டில் ஈடுபட்ட 2 ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அளிக்கிற விளக்கம் திருப்தி இல்லாத பட்சத்தில், 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொடக்கக்கல்வி அலுவலர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக