லேபிள்கள்

1.7.15

கல்லூரிகளில் காலிப் பணியிடங்கள்: நிகழ் கல்வியாண்டுக்குள் நிரப்ப தமிழக அரசுக்கு உத்தரவு

கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிகழ் கல்வியாண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


தமிழ்நாடு தனியார் கல்லூரிகளின் (ஒழுங்குமுறை) விதிகள் 1976-இன் படி தனியார், அரசு நிதி உதவி பெறும், சிறுபான்மை அல்லாத கல்விநிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பிரிவு ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர்களை நியமிக்க தனியார் கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி பேராசியர் ஐ.இளங்கோவன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மனுதாரர் தாக்கல் செய்துள்ள இந்த மனு பொதுவானதாக உள்ளது.யார் தகுதியானவர், யாரை பணியில் அமர்த்தவில்லை என்று எதையும் குறிப்பிடவில்லை.மேலும், இது தொடர்பான விவகாரத்தை பொதுநல வழக்காக கருத முடியாது. இருந்தாலும்,இந்த வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், எதிர்மனுதாரர் கல்லூரியில் சட்ட விதிகளின் கீழ் "ரோஸ்டர்' முறையின் படி பணி நியமனம் நடைபெறுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரி மூலம் சரிபார்ப்பது உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது வரை எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளில் ஆசிரியர்கள் பணியில் 213 காலிப் பணியிடங்களும், ஆசிரியர் அல்லாத பணியில் 111 காலிப் பணியிடங்களும் உள்ளன.

இது தவிர, அனைத்துப் பிரிவுகளின் கீழ் ஆசிரியர் பணியில் 1478 காலிப் பணியிடங்களும், ஆசிரியர் அல்லாதப் பணியிடங்களில் 1673 பணியிடங்களும் காலியாக உள்ளன எனவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள், சிறுபான்மையினர் அல்லாத கல்லூரிகளில் இடஒதுக்கீடு தொடர்பான விதிகளைப் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.பணி நியமனத்தில் "ரோஸ்டர்' முறையில் பாகுபாடு இருந்தால் தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் சட்டம் 1976-இன் படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசு பதில் மனுவில் தெரிவித்துள்ளது.கல்வி நிறுவனங்களில் காலிப் பணியிடங்கள் ஏற்பட்டால், அரசு பரிந்துரைத்துள்ள இடஒதுக்கீட்டு விதிகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், காலிப் பணியிடங்களை வேலைவாய்ப்பு முகாம் மூலமாகவே நிரப்ப வேண்டும்.

வேலைவாய்ப்பு முகாமில் தகுதியான நபர்கள் இல்லையெனில், வேலைவாய்ப்பு முகாமிலிருந்து தகுதியான நபர்கள்கிடைக்கப்பெறவில்லையென சான்றிதழ் பெற்ற பிறகே, செய்தித்தாள்களில் விளம்பரம் செய்து பணி நியமனம் செய்ய வேண்டும் எனவும் வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளதெனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.எனவே, சட்ட விதிகளின்படி இந்த மனு பொதுநல மனுவாகக் கருதமுடியாது என்றாலும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவுகளில் மட்டுமல்லாமல், அனைத்துப் பிரிவுகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை இந்தக் கல்வியாண்டுக்குள் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக