லேபிள்கள்

1.8.15

மழலையர் பள்ளிக்கான விதிமுறைகள் பதிலளிக்க நான்கு வாரம் அவகாசம்

மழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் குறித்து பள்ளிகள் தரப்பில் பதிலளிக்க, நான்கு வாரம் அவகாசம் அளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'தமிழகத்தில் பல மழலையர் பள்ளிகள், அனுமதியின்றி நடந்து வருகின்றன; அதிக கட்டணம் வசூலிக்கின்றன. அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட வேண்டும்' என, கோரப்பட்டது.

இவ்வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அரசு, மழலையர் பள்ளிகள் தொடர்பான விதிமுறைகளை வகுத்து இணையதளத்தில் வெளியிட்டது.இந்நிலையில் இவ்வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சிவஞானம் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், சிறப்பு பிளீடர் கிருஷ்ணகுமார் ஆஜராகி, ''புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன,'' என்றார்.

இதையடுத்து, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:பள்ளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'மழலையர் பள்ளிகள் தொடர்பான விதிமுறைகள் குறித்து எங்கள் கருத்துகளை பதிவு செய்ய வேண்டி உள்ளது; மனுவாக தாக்கல் செய்கிறோம். அதற்கு, நான்கு வாரம் அவகாசம் தேவை' என, கோரினர்.அவர்கள் கோரிய படி, நான்கு வாரம் அவகாசம் வழங்கப்படுகிறது. அதன்பின், அரசு தரப்பில் இரண்டு வாரங்களில் பதிலளிக்கலாம். இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக