லேபிள்கள்

1.9.15

அண்ணாமலை பல்கலைக்கழகம் - 'தொலைதூர படிப்புகளில் மாணவர்களை சேர்க்கலாம்'

தொலைதுார படிப்புகளில் மாணவர்களை சேர்க்கக் கூடாது' என, அண்ணாமலை பல்கலைக்கு, பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜிசி., பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அண்ணாமலை பல்கலைக் கழக பதிவாளர் டாக்டர் ஆறுமுகம், தாக்கல் செய்த மனு:யு.ஜி.சி., உத்தரவுப்படி, 1979 - 80ல், அண்ணாமலை பல்கலையில், தொலைதுார கல்வி துவங்கப்பட்டது. நாடு முழுவதும், 89 மையங்கள் மூலம், தொலைதுார கல்வி வழங்கி வருகிறோம். கடந்த மாதம், 14ம் தேதி, டில்லியில் உள்ள, யு.ஜி.சி.,யின் தொலைதுார கல்வி அமைப்பு, எங்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதில், 'தொலைதுார கல்வியில் மாணவர்கள் சேர்ப்பதை நிறுத்தி வைக்க வேண்டும்; 2015 - 16ல், மாணவர்களை சேர்க்கக் கூடாது' எனக் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பிறப்பிக்கும் முன், எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை; விளக்கம் தர சந்தர்ப்பமும் வழங்கவில்லை. தொலைதுார கல்வி மூலம், உயர் கல்வி அளிப்பது, உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது. வெளிநாட்டு பல்கலைக் கழகங்களும், தொலைதுார கல்வி மூலம் பாடப்பிரிவுகளை துவக்கி நடத்தி வருகின்றன.

தற்போது, யு.ஜி.சி.,யின் உத்தரவுக்கு தடை விதிக்கவில்லை என்றால், ஏற்கனவே சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, யு.ஜி.சி., பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்; அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இம்மனு, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் முத்துகுமாரசாமி, வழக்கறிஞர் ஆர்.சுரேஷ் குமார் ஆஜராகினர்.

மனுவுக்கு, எட்டு வாரங்களில் பதில் அளிக்கும்படி, யு.ஜி.சி., மற்றும் அதன் தொலைதுார கல்வி அமைப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, ஆகஸ்ட், 14ம் தேதி, யு.ஜி.சி., பிறப்பித்த உத்தரவுக்கும் தடை

விதித்தார். அதனால், அண்ணாமலை பல்கலை தொலை துார கல்வியில், மாணவர்களை சேர்க்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக