கல்வித்துறையில் கட்டாய கல்வி, மாணவர் கற்றல் திறன், பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கத்தில், அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டங்கள் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) ஏற்படுத்தப்பட்டன.முறையே 2002 மற்றும் 2009ம் ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்த இத்திட்டங்களுக்கு ஆண்டிற்கு ரூ.ஆயிரம் கோடிக்கு மேல் மத்திய அரசு, மாநில அரசுகள், 75:25 விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்கின்றன.
ஆனால் இத்திட்டங்கள் செயல்பாடு குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.குறிப்பாக, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருவதால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். தள்ளாட்டம்: மாணவர்கள் கற்றல் திறனை ஆய்வு செய்து மேம்படுத்துவதற்காக மாநில அளவில், 380 வட்டார வள மையங்கள் (பிளாக் ரிசோர்ஸ் சென்டர்ஸ்) உருவாக்கப்பட்டன. இவற்றை கண்காணிக்க மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டனர்.
ஆனால், நிதிப் பற்றாக்குறை எனக் காரணம் காட்டி, 2013ம் ஆண்டில் இப்பணியிடங்களில் இருந்தவர்கள் கல்வித்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.மாவட்ட அளவில் திட்டங்களை கண்காணிக்கும் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் தற்போது, 11 மாவட்டங்களில் இப்பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப இதுவரை நடவடிக்கை இல்லை.சர்ச்சையில் ஆர்.எம்.எஸ்.ஏ.,: இதேபோல் நடப்பாண்டில் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், 200 பள்ளிகளுக்கு மட்டுமே இதுவரை வகுப்பறை வசதி ஏற்படுத்தப்பட்ட நிலையில், 1250 தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு வகுப்பறை வசதி இல்லை. ஆனால் கட்டட வசதி ஏற்படுத்துவதற்கு முன்பே மாணவர் அமர 'ஸ்டீல் பெஞ்ச்' வசதி, புத்தகம் மற்றும் அலமாரி வசதிகள் பள்ளிகளில் மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.
இதுகுறித்து தலைமையாசிரியர்கள் சிலர் கூறியதாவது:'ஸ்டீல் பெஞ்ச்' ஒன்று, ரூ.10 ஆயிரம் வீதம் ஒரு பள்ளிக்கு 40 'ஸ்டீஸ் பெஞ்ச்கள்' வாங்க அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். ஆனால், அவற்றின் தரத்தை ஒப்பிட்டால் ரூ.5 ஆயிரம் கூட மதிப்பிட முடியவில்லை. அதேபோல் ஆண்டிற்கு ரூ.25 ஆயிரத்திற்கு நுாலகங்களுக்கான புத்தகங்கள் வாங்க அறிவுறுத்தப்படுகிறது.
ஆனால் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்க முடியவில்லை. அதிகாரிகள் குறிப்பிடும் புத்தகங்களை மட்டும் தான் வாங்கமுடிகிறது. அறிவியல் ஆய்வக உபகரணங்கள் வாங்கும் விஷயத்திலும் தலையீடு உள்ளது என்றனர்.
இத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை ஏனோதானோ என பயன்படுத்தாமல் மாணவர் நலன், பள்ளி மேம்பாட்டிற்காக பயன்படுத்தும் வகையில், இன்று (செப்.,1) நடக்கும் கல்வி மானிய கோரிக்கையில் வழிகாட்டுதல்களை அரசு அறிவிக்க வேண்டும் என ஆசிரியர்கள், கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக